சென்னையில் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி! காபி இனி 20 ரூபாய்.. நாளை முதல் விலை அதிரடியாக உயர்கிறது
சென்னை: சென்னையில் நாளை முதல் டீ, காஃபி விலை உயர்த்தப்படும் (Tea and coffee prices increase in Chennai) என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீ ரூ.15 ஆகவும், காபி ரூ.20 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஒரு டீ 12 ஆகவும், காபி ரூ.15 ஆகவும் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டீயின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

டீ, காபி விலை உயர்கிறது
நாளை முதல் இந்த டீ விலை உயர்வு அமலுக்கு வரும் என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய விலைப்பட்டியல் படி டீ ரூ.15, காபி -20, லெமன் டீ 15, பால், 15, ஸ்பெஷல் டீ ரூ. 20 ஆக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ பிரியர்கள் அதிர்ச்சி
அதேபோல, ராகிமால்ட் , சுக்கு காப்பியின் விலை ரூ 20 க்கும், ஹார்லிக்ஸ், பூஸ்ட் விலை ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் டீக்கடைகளில் கூட்டம் அலைமோதும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவர்கள் முதல் சாதாரண கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ உள்ளது.
பலருக்கும் டீ குடித்தால்தான் வேலையே ஓடும் என சொல்லும் அளவிற்கு டீ மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் தான், டீ மற்றும் காபி விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது டீ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்சல் டீயின் விலையும் உயர்கிறது
பார்சல் டீயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கப் டீ மற்றும் பால் ரூ.45 ஆகவும், ஒரு கப் காபி ரூ.60 ஆகவும், ஸ்பெஷல் டீ கப் ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீத்தூள், பால் விலை உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டும் விதமாக டீ விலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் டீக்கடை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்றாட செலவில் பெரிய அடியாக விழும்
டீ, காபி விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக டீ பிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அலுவலக நேரத்தில் டீ பிரேக்கிற்காக கட்டாயம் இரண்டு வேளை செல்கிறோம். தற்போது டீ மற்றும் நொறுக்குத் தீனிகள் என சாப்பிட்டால் 50 ரூபாய் வரை ஆகும் நிலையில், தற்போது டீயின் விலை உயர்த்தப்பட்டிருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு அன்றாட செலவில் பெரிய அடியாக விழும்.
மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்
இதனால், டீ குடிப்பதையும் குறைத்துக்கொள்ளலாமா என யோசிக்கிறேன் என்று கூறினார். பாலின் விலை அவ்வளவாக உயராத நிலையிலும் தற்போது ஒரே அடியாக ஒரு டீயின் விலை ரூ.15 ஆகவும் ஸ்பெஷல் டீயின் விலை ரூ.20 ஆகவும் உயர்த்தியிருப்பது சாதாரண மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும், எனவே டீக்கடைகளுக்கு வியாபாரம் குறையவே செய்யும் என்பதால் விலை உயர்வு குறித்து டீக்கடை விற்பனையாளர்கள் சங்கம் மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் இதுதொடர்பாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications