அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா?
சென்னை: சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கான தேர்வுகளில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களுக்கு எவ்வளவு சிறப்பு மதிப்பெண் என்பது குறித்து தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு பணி அனுபவத்துக்கும் 1.5 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்கும் உத்தரவுகளை பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கோரியிருந்தார். அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி அறிவிப்பும் சட்டசபையில் வெளியிட்டிருந்தார்.
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் "அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர்கள் பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்ய ஏதுவாக இதற்கான தேர்வுகளில் பகுதிநேர பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

எவ்வளவு மதிப்பெண்
அதன் அடிப்படையில், 2011-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டு பணி அனுபவத்துக்கும் 1.5 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்கும் உத்தரவுகளை பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அரசாணையில் என்ன
பள்ளிக்கல்வி இயக்குநரின் முன்மொழிவை கவனமாக ஆராய்ந்த பிறகு, அரசு அதனை ஏற்றுக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் பங்கேற்கும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் (உடற்கல்வி, தையல், ஓவியம், இசை) பதவிகளுக்கான எழுத்து தேர்வுகளுக்கு ஆண்டு அனுபவத்துக்கு 1.5 மதிப்பெண்கள், அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்தை அனுமதித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
2011 முதல் பணியில் இருக்க வேண்டும்
இந்த சலுகை 2011 முதல் இன்று வரை எந்த சேவை இடைவேளையும் இல்லாமல் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இது அடுத்த 5 ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கு மட்டுமே பொருந்தும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
2011-ம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவிதமான பணி இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். இந்த மதிப்பெண் சலுகை நிரந்தரமானது அல்ல. இது அடுத்து வரும் 5 அரசுப் பணியாளர் சேர்க்கை முறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களில், நீண்ட காலமாகப் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications