அவங்களால டெங்குவையே ஒழிக்க முடியல.. இதுல சனாதனத்தை ஒழிக்கப் போகிறார்களா.. தமிழிசை தாக்கு
சென்னை: சாமி தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசு கட்டுப்பாட்டில் இந்து கோயில்கள் இருக்கக்கூடாது என்பதே அவர்கள் வாதம்.

மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் மட்டும் தமிழக அரசு தலையிடுவதில்லை என்பதை அவர்கள் கேள்வியாக இருக்கிறது. இந்த விவகாரத்தைச் சமீபத்தில் பிரதமர் மோடியும் தெலுங்கானாவில் எழுப்பியிருந்தார். இந்த விவாகரத்தில் வலது சாரிகள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்தே வருகிறது.
சர்ச்சையான பேச்சு: இது ஒரு பக்கம் இருக்கத் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற சென்னையில் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு பெரும் சர்ச்சையானது.. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது தான் பரபரப்பைக் கிளப்பியது. அந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டெங்குவை போலவே சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தார்.
இதை தேசியளவில் பிரச்சினையாக பாஜக எடுத்துச் சென்றது. மத்திய அமைச்சர்கள் தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறினர். சில இடங்களில் உதயநிதிக்கு எதிராகப் போராட்டங்களும் கூட நடைபெற்றது. ஒரு சில நாட்களுக்கு பிறகே போராட்டங்கள் குறைந்தது. இந்த விவகாரத்தில் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
ஆளுநர் தமிழிசை: இதற்கிடையே இது தொடர்பாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் ஆன்மீகத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்துவதாக விமர்சித்த அவர், மற்ற மதங்களைக் குறித்து எதுவும் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்து மதம் குறித்தும் ஆன்மீகம், சனாதனம் குறித்தும் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. சனாதனத்தை டெங்குவை ஒழிப்பது போல ஒழிப்போம் என்று கூறுகிறவர்களால். ஆனால் அவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை. இப்போது தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகள் கூட டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொழியைக் கற்கக் கூடாதா: இந்து மதத்தை விமர்சிப்பது போல மற்ற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை விமர்சிக்க முடியுமா. அதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். மேலும், இங்கே சிலர் பிரதமர் மோடி மதத்தாலும் மொழியாலும் நாட்டை பிரித்து ஆள்வதாகச் சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள், யார் இங்கே பிரித்து ஆள்கிறார்கள். பிரதமர் மோடி அப்படி எதையும் செய்வதில்லை.
மற்றொரு மொழியைக் கற்கக் கூடாது என்பதை இங்குள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். மதம், மொழியை வைத்து யார் பிரித்து ஆழ்வது என அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட மதத்தினரின் பண்டிகைகளுக்கு இங்குள்ள முதல்வரே வாழ்த்து சொல்வதில்லையே" என்றும் அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications