நீண்ட ஆயுள்.. நிறைந்த செல்வம்..முதல்வரை மனதார வாழ்த்திய தமிழிசை சவுந்தரராஜன், இளையராஜா
70வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதல்வருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்,நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா வாழ்த்தியுள்ளார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... என்று பதிவிட்டுள்ளார்.
மக்களுக்கு
"தி"னமும்
"மு"ழு உடல் நலத்துடன்
"க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
இதே போல இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து வீடியோ மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் " என் இசையமைச்ப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக விமரிசையாக கொண்டாட திமுக தலைமைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். விழாவில் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துவார். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் எல்.இ.டி. விளக்குகளால் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. தொண்டர்களும் பொதுமக்களும் அமரும் ஒவ்வொரு இருக்கையிலும் தண்ணீர் பாட்டில், ஒரு குளிர்பான பாக்கெட் வைக்கப்பட்டிருக்கும். பொதுக் கூட்டத்திடலை சுற்றிலும் மு.க.ஸ்டாலினின் 21 மாத ஆட்சியின் சாதனைகளை 200 பேனர்களில் வைத்துள்ளனர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் சாதனைகள் இடம் பெற்றுள்ளன. தலைவர்கள் திடலுக்குள் வரும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 20 அடி அகல பேனர்கள் இடையிடையே 100 வாழை மரங்கள் என 2000 வாழை மரங்களும் கட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அண்ணா சாலையில் செல்லும் பொதுமக்களும் பார்க்க வசதியாக சாலை ஓரத்தில் 60 அடி நீளத்திற்கு எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications