பரட்டை தலை தான் என் பலமே! எப்போதும் ரயில் பயணம் தான்! நெகிழ வைத்த தமிழிசை சவுந்தரராஜன்!
சென்னை: பரட்டை தலை தான் தனது பலம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை சிறுவயதில் பரட்டை என்ற பட்டப்பெயரை சொல்லித்தான் நண்பர்கள் அழைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
ஹெலிகாப்டரில் பயணிக்க தனக்கு உரிமையும், அதிகாரமும் இருப்பினும் கூட ரயில் பயணத்தையே தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி சென்னையில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பல புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். 16 வயதினிலே திரைப்படத்தில் ரஜினிகாந்தை பரட்டை என்று அழைத்தது போல் தனது சிறுவயதில் நண்பர்கள் தன்னை பரட்டை என்ற பட்டப்பெயரை சொல்லித் தான் அழைப்பார்கள் என்று கூறினார். உன் சுருட்டை முடி தான் உனக்கு பலம் என தனது அம்மா தன்னிடம் கூறுவார் என்றும் இன்று அதேபோல் பரட்டை தலை தான் தனக்கு பலமாக அமைந்துள்ளதாகவும் பேசினார்.

ரயில் பயணம்
மேலும், தன்னுடன் கணவர் உட்பட 5 பேர் வரை அழைத்துச்செல்வதற்கு வசதியிருந்தும் ஒரே ஒரு பெண் உதவியாளரை மட்டும் அழைத்துச் செல்வதாகவும் விமானம், ஹெலிகாப்டர் என பல சலுகைகள் ஆளுநர் என்ற முறையில் இருந்தும் தாம் ரயிலிலேயே பயணித்து வருவதாகவும் தெரிவித்தார். இதேபோல் மாதம் தோறும் தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு ஆகும் உணவுச் செலவை ஆளுநர் மாளிகைக்கு செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

முன் மாதிரி
மொத்தத்தில் மாநில அரசின் நிதியில் தாம் சாப்பிட வில்லை என்பதை அவர் சூசகமாக தெரியப்படுத்தினார். அதேபோல் ஆளுநர் என்பதற்காக அரசின் சலுகைகளை மொத்தமாக அனுபவிக்கவில்லை என்பதையும் புத்தக வெளியீட்டு விழா மூலம் தெரியப்படுத்தியுள்ளார். தந்தை குமரி அனந்தன் கற்றுக் கொடுத்த எளிமையை என்றும் மாறாமல் கடை பிடித்து வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

ஜனாதிபதி
அண்மையில் தன்னை சந்தித்த பலரும், குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதியும், திறமையும் முழுமையாக தனக்கு இருப்பதாக கூறியதாகவும் ஆனால் தாம் மக்களுடன் மக்களாக பயணிக்கவே விரும்புவதாகவும் கூறி தனது எளிமையை வெளிப்படுத்தினார் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications