‘தெலுங்கு பையன் குகேஷ்’..! நாயுடு போட்ட ட்வீட்.. வெச்சு செய்த செஸ் ரசிகர்கள்
சென்னை: செஸ் சாம்பியன் குகேஷை தெலுங்கு பையன் என மொழிரீதியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டிப் பாராட்டியது தமிழ்நாட்டில் உள்ள செஸ் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் சிங்கப்பூரில் நடைபெற்ற 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்று சாதனைப் படைத்துள்ள செய்தி இந்தியர்கள் பலரையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் இறுதிக்கட்ட ஆட்டம் செஸ் ரசிகர்களுக்கு ஒரு த்ரிலிங் ஆன அனுபவத்தை அளித்திருந்தது. இந்தப் போட்டியில் கடைசிக் கட்டத்தில் எதிரணியில் களம் இறங்கிய டிங் லிரன் ஆட்டத்தின் போது லேசாக சறுக்கினார். அவரது தவறை சரியாக உணர்ந்து காய் நகர்த்தியதால் குகேஷ் புத்திசாலித்தனமாக வெற்றிபெற்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் அப்படி எந்தவித மொழி பிரிவினையும் அவர் வெளிப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு படி மேலே சென்று இந்தியாவின் சதுரங்க விளையாட்டு மரபை குகேஷ் நிரூபித்துக் காட்டி இருக்கிறார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், “18 வயதில் இளைய உலக சதுரங்க சாம்பியனான குகேஷுக்கு வாழ்த்துகள். உங்களின் இந்தச் சாதனை இந்தியாவின் செழிப்பான சதுரங்க மரபைத் தொடரச் செய்துள்ளது., மேலும் மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக சதுரங்க தலைநகராகத் தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. தமிழ்நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என்றே கூறியுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றது முதலே குகேஷுக்கு என்ன வகையில் உதவிகளைச் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்து தந்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். குகேஷ் சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து உதயநிதி அவரது எக்ஸ் தள பதிவில், " சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2024 இல் சாம்பியனாக உருவெடுத்த நமது சொந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். SDAT இன் ELITE வீரர்கள் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

அவரது வெற்றி நம் நாட்டை பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இவ்வளவு அசாதாரண திறமையைக் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து பிரகாசியுங்கள்" என்றே தெரிவித்திருந்தார். அவர் பதிவில் நாட்டையே பெருமைப்பட வைத்துள்ளார் என்றே கூறியிருந்தார்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதில்கூட, “ குகேஷின் சாதனைக்கு வாழ்த்துக்கள். இது அவரது இணையற்ற திறமையும் கடின உழைப்பையும் அசைக்க முடியாத உறுதியும் காட்டுகிறது. அதற்கான விளைவுதான் இந்த வெற்றி. அவரது வெற்றி சதுரங்க வரலாற்றில் அவரது பெயரைப் பொறித்திருப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களைப் பெரிய கனவுகளைக் காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது” என்று பாராட்டி இருந்தார். தமிழக அரசு முன்னெடுத்த முயற்சியால்தான் குகேஷ் இந்த சிங்கப்பூர் போட்டியில் கலந்துகொண்டார். அதற்காக ரூ. 10 லட்சம் நிதியை தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. திறமையைப் பார்த்தே தமிழகம் குகேஷ் பின்னால் நின்றது. இதில் திறமையும் விளையாட்டு மட்டுமே அளவீடாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குகேஷை ஒரு தெலுங்கு பையன் என மொழிரீதியாக அடையாளப்படுத்தி உரிமைக் கொண்டாடியது பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. சந்திரபாபு நாடு தனது எக்ஸ் தள பதிவில் அவ்வாறு கூறியதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இவரைப் போலவே குகேஷ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அவரது குடும்ப பின்புலத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர், "இளம் செஸ் சாம்பியன் குகேஷ் வரலாறு படைத்தது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் அவர் விஸ்வநாதன் ஆனைந்துக்குப் பிறகு சாம்பியன் ஆனது செஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. குகேஷ் தொம்மராஜு தமிழ்நாட்டின் தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெலுங்கு மக்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டு மொழிரீதியாக ஒரு பிரிவினை விளையாட்டுத் துறைக்குப் புகுத்தி இருக்கிறார். இந்தக் கருத்துகளை வைத்து இந்த இருவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications