மண்டையை பிளக்கும் வெயில்.. சென்னையில் புதிய உச்சம் தொட்டது வெப்பம்! வீடுகளிலேயே முடங்கும் பொதுமக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 16 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் பொதுவாகவே வெப்பம் அதிகமாகவே இருக்கும். கோடைக் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் உச்சத்தை தொடும். வட இந்தியாவில் வெப்ப அலையும் கூட ஏற்படும்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் வெப்பத்தின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. இந்தாண்டு பிப். மாதமே நாட்டில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவானது.
16 இடங்களில் சதமடித்த வெயில்: கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது. இப்போது கோடைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதீதமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் எச்சரித்தும் உள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே நாட்டில் பல இடங்களில் வெப்பம் சதமடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் ஒரே நாளில் 16 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. இந்தாண்டு தமிழ்நாட்டில் ஒரே நாளில் இத்தனை இடங்களில் வெயில் சதமடித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
அதிகபட்ச வெப்பம் எங்கே? அதிகபட்சமாக ஈரோட்டிலும் மதுரை விமான நிலையத்திலும் 106 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்து கரூர் பரமத்தி, வேலூர் மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை நகரம், திருச்சி நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவான நிலையில், பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வரவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
அதேபோல சேலம் மற்றும் திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவான நிலையில், பாளையங்கோட்டை, தஞ்சை திருப்பத்தூரில் 102 டிகிரி பாரன்ஹூட் வெப்பமும், கடலூர், தர்மபுரி, நாகை 101 டிகிரி பாரன்ஹூட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
சென்னை: தலைநகர் சென்னையைப் பொறுத்தவரைச் சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்து சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டு சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும். கோடை காலம் முடியாத நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலே இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இப்போதே இந்தளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதில் கத்தரி வெயில் காலத்தில் வெப்பம் எந்தளவுக்கு இருக்குமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மதிய நேரங்களில் பொது மக்கள் குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெப்பம் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications