திருப்பரங்குன்றம் மலை உச்சியில்.. தீபம் ஏற்ற அனுமதி அளித்ததை எதிர்த்து கோயில் நிர்வாகம் அப்பீல்
சென்னை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அனுமதி வழங்கியிருந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டு இருந்தது. மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம் ரவிக்குமார் என்பவர் இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூண் உள்ளது. இங்கு நீண்ட காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ஆகம விதிமீறல். எனவே கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 1994-ம் ஆண்டு கோர்டு பிறப்பித்த உத்தரவின் பெயரில் மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது.
தீபத்தூண் தற்போது மூடப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பினை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மேற்கூறிய வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல் முறையீடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications