கோவில் ஆக்கிரமிப்பு.. கடமை தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: அறநிலையத்துறையில் கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம்செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ''ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை செயல் அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரியும், கடந்த 2014 முதல் அங்கு பணியில் இருந்தவர்கள் குறித்த தவல்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிசூலநாதர் கோயில்
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள திரிசூல மலையில் அமைந்திருக்கிறது திரிசூலநாதர் கோயில். இந்த கோயில் பெயரால் தான் இந்த இடத்துக்கு திரிசூலம் என்று பெயர் வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும், குத்ததைகக்கு விடப்பட்டன. மழை பொய்த்ததால், அந்த நிலங்கள் தரிசாக மாறின. பின், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் 70 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பட்டா போட்டு விற்கப்பட்டிருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நீதிமன்றம்
கோயில் நிலங்களில் தார் சாலைகள் போடப்பட்டிருப்பதாகவும், மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து திரிசூல நாதர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மின் இணைப்பு
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தாத கோவில் செயல் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, 2004 முதல் திரிசூல நாதர் கோயிலில் செயல் அலுவலராக பணியாற்றியவர்களின் விவரங்களை சமர்பிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயல் அலுவலர்
மேலும்,கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன எனவும்,கடமையை செய்ய தவறிய செயல் அலுவலர்,அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திரிசூலநாதர் கோயில் ஆக்கிரமிப்புகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications