தவெக மா.செ.க்களிடம் புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்! விஜய் காதுக்கு சென்றதால் அதிர்ச்சி! கூண்டோடு காலி?
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்ற அறிவிப்பால் கலங்கி போயுள்ள மாவட்டச் செயலாளர்கள் தவெகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனராம். இது அக்கட்சித் தலைவர் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் மக்களை சந்திப்பதில்லை, பனையூர் பண்ணையார், டிவிட்டரில் அரசியல் செய்யும் அரசியல்வாதி என்றெல்லாம் பல அரசியல் கட்சியினர் விமர்சித்ததுண்டு.

எனினும் விஜய்க்கான ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அதிலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான போது அந்த இடத்தை விட்டு விஜய் ராக்கெட் வேகத்தில் சென்னை வந்து சேர்ந்தது அவரது "மனிதநேயத்தை" வெளிச்சம் போட்டு காட்டியது.
72 நாட்கள்
அதன் பிறகு 3 நாட்கள் கழித்து அறிக்கை வெளியிட்டது, 72 நாட்கள் கழித்து வெளியே வந்தது, மாமல்லபுரத்திற்கு 41 பேரின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் சொன்னது என தொடர்ந்து விஜய் சர்ச்சையில் சிக்கினார்.
ஜனநாயகன்
எல்லாவற்றுக்கும் மேலாக விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் கிடைக்காமல் சிக்கல் எழுந்தது. இதனால் தயாரிப்பாளர் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஆனாலும் விஜய் குரல் கொடுக்கவில்லை. இதனால் தனது சொந்த துறை, தனது படத்தின் தயாரிப்பாளருக்காக கூட குரல் கொடுக்காத விஜய் எங்கிருந்து தமிழக மக்களுக்காக அநீதிகளை தட்டி கேட்பார்? என்றெல்லாம் கேள்விக்கணைகள் விஜய்யை நோக்கி சென்றன.
அஜிதா ஆக்னல்
ஆனால் அவரோ வழக்கம் போல் எதை பற்றியும் கவலைப்படாமல் அவரது ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். அது போல் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னெல், தனக்கு பதவி கொடுக்காததால் விஜய்யின் காரை மறித்து முறையிட சென்றார்.
உதாசீனம்
ஆனால் விஜய்யை அவரை ஒரு பெண் என்றும் பாராமல் உதாசீனப்படுத்திவிட்டு சென்றார். இதனால் தொடர் மன உளைச்சலால் அந்த பெண் தற்கொலை முயற்சி செய்த போதும் விஜய்யோ அவர் சொல்லி ஏதாவது ஒரு கட்சி நிர்வாகியோ அஜிதாவை பார்க்க மருத்துவமனைக்குக் கூட செல்லவில்லை.
விஜய் கட்சி
அதாவது விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு முன்பே பலர் விஜய் மக்கள் இயக்கத்தில் கை காசை போட்டு நிறைய நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் உரிய பதவியோ மரியாதையோ கிடைக்கவில்லை என்பதால் பலர் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
விருப்பமனு விநியோகம்
இந்த நிலையில் தவெக சார்பில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 10-ஆம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்ததாம்.
அப்போது சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கெல்லாம் மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் அங்கு நிறுத்தப்படும் வேட்பாளரை தளபதி விஜய்யாக கருதி அவரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என கூறினாராம்.
கட்சி தாவ திட்டம்
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கும் முன்பே நலத்திட்டங்களை செய்து விஜய்க்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு சீட் இல்லை என்பதால் அவர்கள் தவெகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனராம். மாவட்ட நிர்வாகிகள் அப்படியே கூண்டோடு விலகி வேறு கட்சிக்குச் செல்லலாம் என்ற முடிவில் உள்ளனராம். இது விஜய்யின் காதுகளுக்கு சென்றதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications