தாளமுத்து, நடராசனுக்கு நினைவு மண்டபம்..அம்பேத்கர் நூல்களை மொழிபெயர்க்க மானியம்-பட்ஜெட்டில் அறிவிப்பு
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசனுக்கு நினைவு மண்டபமும், அம்பேத்கர் நூல்களை மொழிபெயர்க்க மானியம் ஒதுக்கீடு செய்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபமும், அம்பேத்கர் நூல்களை மொழிபெயர்க்க ரூ. 5 கோடி மானியம் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் உரையை தொடங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் பேசத் தொடங்கியதும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். ஆனால், இன்று பட்ஜெட் உரையை காரணம் காட்டி சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் நினைவிடம்
அப்போது, மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபமும், அம்பேத்கர் நூல்களை மொழிபெயர்க்க ரூ. 5 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தாய் தமிழைக் காக்க, இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.

அம்பேத்கரின் படைப்புகள்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, 'தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு' நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை
கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமைகூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில், தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தப் பயணங்கள், நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு, தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும். நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற் கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது.

சங்கமம் கலை விழா
வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும். பார்போற்றும் நம் கலைப்பண்பாட்டினை இளைய தலைமுறையினர் அறிந்து, மகிழும் வகையில், சென்னையில் அனைத்துத் தரப்புமக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் நல்வாய்ப்புகளை இவ்விழாக்கள் ஏற்படுத்தும். இதற்காக இந்த வரவு-செலவுத்திட்டத்தில் 11 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications