முருகன் வீரத்தின் அடையாளம்! யாவரும் வழிபடலாம்! தமிழன் வழிபாடு நூலாசிரியர் ஆதங்கம்!
சென்னை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அது குறித்த தனது பார்வையை தமிழன் வழிபாடு நூலாசிரியர் ராஜா தமிழ்மாறன் ஒன் இந்தியா தமிழிடம் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதன் விவரம் வருமாறு:
''அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சேயோன் என குறிப்பிடுவது முருகனை தான். சேயோன் வழிபாடு தான் நாளடைவில் முருக வழிபாடாக மாறியது. முருகனை வீரத்தின் அடையாளமாக தான் காலம் காலமாக தமிழர்கள் பார்க்கிறார்கள். முருகனை வணங்குவதை வீரம் சார்ந்த வழிபாடாக பார்க்கும் சமூகம் நம்ம தமிழ் சமூகம். பழனி முருகன் கோயில் ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தார் வசம் இருந்தது. காலப்போக்கில் ஆதிக்கம் செலுத்தப்பட்டு இப்போது யார் வசம் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்,''

''பழனி முருகன் கோயிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்பதே எனது நிலைப்பாடு. மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்புவது முருக வழிபாடு என்பது வீரத்தின் அடையாளமான வழிபாடு. ஐயப்பன் கோயிலுக்கு செல்வோர், ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு முன்னர் அங்குள்ள வாவர் மசூதியில் வழிபாடு செய்துவிட்டு தானே செல்கிறார்கள். இதை என்னவென்று சொல்வீங்க, கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சி தான் அம்மன் வழிபாடு. தாயை வணங்குகிறோம், அம்மன் எந்த ரூபத்தில் இருந்தாலும் தாயாக நினைத்து வணங்கும் சமூகம் தமிழ் சமுகம்.''
''பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என்ற உயநீதிமன்ற தீர்ப்பை ஏற்க எனது மனம் மறுக்கிறது. மக்களின் நம்பிக்கையை நிர்ணயிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்பது எனது தாழ்மையான கருத்து. உலக பரப்பளவு என்று எடுத்துக்கொண்டால் வெறும் 2.5% தான் இந்தியா. மீதமுள்ள 97.5% பரப்பளவில் வெவ்வேறு மொழிகளை பேசக்கூடிய, வெவ்வேறு தெய்வங்களை வணங்கக்கூடிய மக்கள் தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் என்ன சொல்வது.''
''மத நம்பிக்கையை பொறுத்தவரை அவரவர் வசம் விட்டுவிட வேண்டுமே தவிர யாரும் திணிக்க முற்படக் கூடாது. தாய் வழிபாடான அம்மனையும், வீர வழிபாடான முருகனையும் கொண்டிருக்கக் கூடிய மக்கள் தமிழ் மக்கள். இயற்கை சார்ந்த, இயற்கைக்கு நன்றி செலுத்தக் கூடிய மக்கள் தமிழ் மக்கள். இதனால் யார் என்ன சொன்னாலும் தமிழ் சமூகம் என்பது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையாக வாழக்கூடிய சமூகம் என்பது எனது கருத்து.'' இவ்வாறு தமிழன் வழிபாடு நூலாசிரியர் ராஜா தமிழ் மாறன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications