தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு.. சிறந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் எவை தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான விருதுகளை வழங்குவார்.
மாநகராட்சி மட்டுமின்றி நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சிறந்த கிராம பஞ்சாயத்துகளும் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பல்வேறு தகுதி காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த மாநகராட்சி
இதன்படி, தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சி பட்டியலில் ஊட்டிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. திருச்செங்கோடு மற்றும் சின்னமனூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான விருதுகளை வழங்குவார்.

பேரூராட்சிகள்
சிறந்த பேரூராட்சிகள் பட்டியலில் திருச்சி மாவட்டத்தின் கல்லக்குடி முதலிடத்தையும், கடலூரின் மேல்பட்டாம்பாக்கம் 2ம் இடமும், சிவகங்கையின் கோட்டையூர் 3ம் இடமும் பிடித்துள்ளன.

பரிசுத் தொகை
சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த பேரூராட்சிகளுக்கு முறையே ₹10 லட்சம், ₹5 லட்சம், ₹3 லட்சமும் பரிசாக முதலமைச்சரால் வழங்கப்படும்.

தஞ்சைக்கு சிறப்பு
பெருவுடையார் கோயில்கொண்ட தஞ்சை மாநகரம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று புகழப்பட கூடிய ஒன்றாகும். சோழப்பேரரசின் தலைநகராக விளங்கிய வரலாற்று சிறப்புமிக்கது. அந்த நகரத்துக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்திருப்பது தஞ்சை மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வருடம் விருதுகள்
கடந்த வருடம் அதாவது 2020ம் ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக வேலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சியாக முதலிடத்தை பிடித்தது விழுப்புரம். இரண்டாவது இடம் கரூர், மூன்றாவது இடம் கூத்தநல்லூர் ஆகியவற்றுக்கு கிடைத்தது.

சிறந்த மாநகராட்சி
2019 ஆம் ஆண்டில் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான முதல் இடத்தை தருமபுரி நகராட்சி பெற்றது. இரண்டாவது இடத்தை வேதாரண்யம், மூன்றாவது இடத்தை அறந்தாங்கி ஆகியவை பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications