தென் சென்னையை தன் வசப்படுத்தும் "தமிழச்சி" யார்? அதிமுக- பாஜகவுக்கு நெக் டூ நெக்! தந்தி டிவி கணிப்பு
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியை தன் வசப்படுத்த போவது யார் என்பது குறித்து தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் தகவல்கள் கிடைத்துள்ளன.
மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் இத்தனை நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பொதுவாக மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓயும். ஆனால் இந்த முறை கோடை வெயில் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியானது.
இந்த கருத்துக் கணிப்புகளில் தென் சென்னை கள நிலவரம் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் நாம் தமிழர் சார்பில் தமிழ்ச் செல்வி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு வாக்களிப்பதாக 29 முதல் 35 சதவீதம் பேரும் அதிமுகவுக்கு வாக்களிப்பதாக 26 சதவீதம் முதல் 32 சதவீதம் பேரும் பாஜகவுக்கு வாக்களிப்பதாக 26 சதவீதம் முதல் 32 சதவீதம் பேரும் நாம் தமிழருக்கு என 5 சதவீதம் முதல் 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து மீண்டும் தென் சென்னையை தமிழச்சியே தன் வசப்படுத்துவார் என தெரிகிறது. இதில் இரண்டாவது இடம், மூன்றாவது இடத்திற்குத்தான் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. இந்த கணிப்பில் ஜெயவர்தனும் தமிழிசையும் நெக் டூ நெக் போட்டியில் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்குள் சொற்ப அளவிலேயே வாக்கு வித்தியாசம் இருக்கும் என தெரிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5,63,143 வாக்குகளும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் 2,15,934 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இருந்த வாக்கு வித்தியாசம் 3.47 லட்சம் ஆகும். இந்த தோல்வியை அடுத்து தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது மக்களுக்கு சேவை செய்ய தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் களமிறக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications