கள்ளக்குறிச்சியில் களமிறங்கிய சிபிசிஐடி! 3 முறை விழுந்த ‘மாணவியின் டம்மி’! ஹாஸ்டல் அறையில் தேடுதல்!
சென்னை : கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்ற சிபிசிஐடி போலீசார், மாணவியை போன்ற உருவ பொம்மையை தயார் செய்து மாடியில் இருந்து கீழே ஆய்வு நடத்தினர்.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
தனியார் பள்ளி மாணவியின் இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

சிபிசிஐடி போலீசார்
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவிட்டபடி கள்ளிக்குறிச்சியில் மாணவி பலியான பள்ளியில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அதிகாரிகள் குழுவினர் இன்று, சின்னசேலம் கணியமூர் சாலையில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வளாகம், தலைமை ஆசிரியர் அறை, தாளாளர் அறை உள்ளிட்ட பகுதிகளில் தடயங்கள் கிடைக்கிறதா என தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் ஆய்வு
மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்ற சிபிசிஐடி போலீசார், மாணவி தங்கியிருந்த விடுதி பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மாணவி பயன்படுத்திய பொருட்கள், மற்றும் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என நீண்ட நேரம் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவி விழுந்ததாக கூறப்படும் இடங்களில் நீண்ட நேர ஆய்வு செய்தனர்.

உருவ பொம்மை
ஆய்வின் போது அப்போது மாணவியை போன்ற உயரம், எடை கொண்ட உருவ பொம்மையை தயாரித்து அதனை மொட்டை மாடி மற்றும் கட்டிடத்தின் 2 மற்றும் 3-வது தளத்திலிருந்தும், கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து 3 முறை கீழே போட்டு ஆய்வு செய்தனர். குறிப்பாக பள்ளி மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் இடத்தின் தன்மை, விழுந்த இடத்தின் உயரம், விழுந்த போது என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தி ஆதரங்களை பதிவு செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடயங்கள்
தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி தங்கி இருந்த விடுதியில் அறைக்குச் சென்ற சிபி செய்தி போலீசார் அவர் தங்கி இருந்த அறை மற்றும் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பகுதிகளில் ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என ஆய்வு செய்தனர் மதியம் 12:00 மணிக்கு பள்ளி வளாகத்திற்கு வந்த சிபிசிஐடி விசாரணை குழுவினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு
தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஆசிரியைகள் மாணவியின் உடன் பயின்ற சக மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications