நடுரோட்டில் "ஆடிக்கொண்டே" வந்த டான்ஸர் கார்.. பறந்துபோய் விழுந்த போலீஸ்காரர்.. கடைசியில் பார்த்தால்?
அதிவேகமாக காரை ஓட்டி போக்குவரத்து காவலரை இடித்து தள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை: சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை காரில் மோதிவிட்டு சென்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யும் நோக்கில் காரை ஓட்டி வந்தாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை குறைக்கவும் காவல்துறையினர் இரவு நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிய போக்குவரத்து காவல்துறையினர் மற்றொருபுறம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குற்ற சம்பவங்களும், போக்குவரத்து விதி மீறல் சம்பவங்களும் பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவ்வளவு பாதுகாப்புகளை மீறியும் குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே காவல்துறையினரும் கூடுதல் தணிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவரை அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன சோதனை
ராயப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே இரும்பு தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 'ஷிப்ட்' ரக கார் ஒன்று வேகமாக வந்திருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த உதவி ஆய்வாளர்கள் மோகன், இளங்கோவன் மற்றும் அவருடன் காவலர் ஜெயக்குமார் ஆகியோர் நின்றிருக்கின்றனர். ஆனால் கார் வேகம் குறையாமல் வந்ததையடுத்து உதவி ஆய்வாளர்கள் இருவரும் விலகிக்கொள்ள, காவலர் ஜெயக்குமார் மட்டும் குறுக்கே நின்றிருக்கிறார்.

நிற்காமல் சென்ற கார்
காரை ஓட்டி வந்த நபர் இதனை கவனித்த பின்னரும் காரை நிறுத்தாமல் வேகத்தை அதிகரித்திருக்கிறார். இதில் கார் காவலர் ஜெயக்குமார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. மோதிய வேகத்தில் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து மற்ற காவலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். ஜெயக்குமார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் காயம் பலமாக இருந்ததால் அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

கைது
இந்த சம்பவத்தையடுத்து கார் யாருடையது? அதை ஓட்டி வந்தது யார்? போன்ற விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல விபத்து நடந்த பகுதியை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி மற்றும் போக்குவரத்து காவல்துறையின் அதிநவீன கேமிராக்கள் இருந்தாலும் கூட அது சரியாக வேலை செய்யாததால் இக்கேமிராக்களில் வீடியோ எதுவுதும் பதிவாகவில்லை. இதனையடுத்து அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

தீவிர விசாரணை
இதில் இக்கார் தாம்பரத்தை சேர்ந்த காமாட்சி என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சம்பவத்தன்று அவர் காரை ஓட்டி வரவில்லை என விசாரித்ததில் தெரிய வந்தது. அப்படியெனில் காரை யார் ஓட்டியது என்று தீவிரமான விசாரித்ததில் காரை நடன கலைஞர் கிஷோர் என்பவர் ஓட்டி வந்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமைறவாக இருந்த கிஷோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் குடித்துவிட்டு காரை ஓட்டினாரா? அல்ல கொலை செய்யும் நோக்கத்தில் காரை ஓட்டினாரா என்பது தொடர்பாக தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications