தாம்பரத்தில் காருக்கு இஎம்ஐ கட்டாத தொழில் அதிபரின் காது ஜவ்வு கிழிந்தது.. போலீசில் புகார்
சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் காருக்கான மாத தவணை கட்டவில்லை என்று கூறி கடன் வாங்கியவரை நிதி நிறுவன ஊழியர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சரியான வருவாய் ஆதாரம் இல்லாமல் இஎம்ஐயில் பைக், கார், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் வாங்கியவர்கள் நிலைமை உண்மையில் கடினமாக இருக்கிறது. குறிப்பாக கார், ஆட்டோ போன்ற பயணிகளை நம்பி வாகங்களை எடுத்தவர்கள் நிலைமை சென்னையில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

ஒரு பக்கம் தனியார் ஆப்களின் கட்டுப்பாடு, மறுபக்கம் சரியான வாடகை கிடைக்காத நிலையால் வாடகைக்கு கார் மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்கள் அவதிப்படுகிறார்கள். அதேபோல் வேறு தொழில் செய்பவர்கள், தொழிலை நம்பி காரை வாங்குகிறார்கள்,. ஒரு கட்டத்தில் தொழில் முடங்கும் அளவிற்கு நஷ்டம் ஏற்படுகிறது. அப்படி நஷ்டம் ஏற்படும் போது காருக்கு வாங்கிய இஎம்ஐ தொகையை மாதம் மாதம் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் சிக்கலை சந்திக்கும் காரின் உரிமையாளர்கள் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் அவமானப்படுத்தப்படுவதுடன் தாக்கப்படுகிறார்கள்.. அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை சேலையூரில் நடந்திருக்கிறதாம்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்த 43 வயதாகும் ஆனந்தன் என்பவர் அந்த பகுதியில் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் ஒன்று வாங்கியிருக்கிறார். இந்த காருக்கு மாதம் மாதம் தவணையை செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில் காருக்கான இந்த மாத தவணைத்தொகை கட்ட 12 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாத தவணை கட்டவில்லை என அவரது வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர், ஆனந்தனை தாக்கியதாகவும், இதில் அவரது காது ஜவ்வு கிழிந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுபற்றி தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனந்தனுக்கு ஆதரவாக தமிழ்நாடு கட்டுமான எந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களை சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் பேச்சுவார்த்தைக்கு போலீசார் அழைத்து சென்றார்கள் இது தொடர்பாக நிதி நிறுவனத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரும் தன்னை ஆனந்தன் தாக்கியதாக புகார் கொடுத்தார். இந்த இரண்டு புகார்கள் மீதும் சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications