பொதுமக்கள் குறைகளைச் சொல்ல எளிதான முறை...4 பிரிவுகளை இணைத்து உருவானது ‘முதல்வரின் முகவரி’
முதலமைச்சர் தனிப்பிரிவு, 1100 ஹெல்ப் லைன் உள்ளிட்ட 4 பொதுமக்கள் புகார் பிரிவு ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 'முதல்வரின் முகவரி' என்ற சிறப்புத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளும் இனி 'முதல்வரின் முகவரி' துறையின் கீழ் செயல்படுவர் என தலைமைச் செயலர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் 'முதல்வரின் முகவரி' துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்க படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:
முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனி பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் 'முதல்வரின் முகவரி' துறையின் கீழ் செயல்படுவர்
தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் (IIPGMS) ஒரு முதன்மை பொது குறைதீர்வு அலுவலர் பதவி (Chief Public Redressel Officer) 'முதல்வரின் முகவரி' துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது.
மற்றும் 6 பொது குறை தீர்வு பார்வை அலுவலர்கள் (Supervisory Public Redressel Officer) இனி 'முதல்வரின் முகவரி' துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.
ஒரு பொதுத்துறை தீர்வு மேற்பார்வை அலுவலர் (SPGRO) பதவி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் நிலையில் ஒரு அலுவலர் நியமிக்கப்படுவார். அவருடைய நிலைக்கு ஏற்ப அனைத்து சலுகைகள் வழங்கப்படும்.
தலைமைச்செயலகத்தில் முதல்வரின் முகவரி' துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக பொது துறை செயல்படும். முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்கு தீர்வு காண IIPGMS Helpline மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாக (single portal) பயன்படுத்தப்படும். இனி முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும்.
IIPGMS Helpline ,தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண், மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக தகவல் பெறுவதற்காகவும் மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும் இனி 'முதல்வரின் முகவரி' துறையின் கீழ் இயங்கும் . இந்த இணையத்தளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து 'முதல்வரின் முகவரி' துறையின் சிறப்பு அலுவலர் பொதுத்துறை செயலாளர் செயலாளருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார்.
இணையதள முகப்பு, சி.எம் ஹெல்ப் லைன், பராமரிப்பு தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் பொது துறையால் மேற்கொள்ளப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு ஆளுநராக நியமிக்க படுகிறார் இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணையில் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications