"ஆஹா".. சொல்லத்தான் நினைக்கிறேன் "கமலா".. துணிச்சல் "பைரவி".. உளக்குமுறலின் மனசிதறல்கள்.. ஸ்ரீவித்யா
நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாளை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்
சென்னை: இன்றைக்கும் கூட எல்லோராலும் மறக்கப்படாமல் இருக்கிறார் ஸ்ரீவித்யா என்னும் "அதிசயராகம்". இன்று அவரது பிறந்தநாளை நினைவுகூர்வதில் ஒன் இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது..!
சாந்தமான குணம்.. கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு என அனைத்தையுமே குறைவின்றி வெளிப்படுத்தியவர் ஸ்ரீவித்யா.
அதிர்ந்து பேச கூட தெரியாமல்.. காதலை வெளிப்படுத்தவும் துணிவில்லாமல் கண்ணீர் மல்க கலங்கி நிற்கும் "சொல்லத்தான் நினைக்கிறேன்" கமலாவும் சரி... துணிச்சல் மிக்க "அபூர்வராகங்கள்" பைரவியும் சரி.. இரண்டுமே சரிவிகித உளக்குமுறல்களின் மன சிதறல்கள் தான்!

துணிச்சல்
ஹீரோயினாக நடித்தபோது, நம்பர் ஒன் அந்தஸ்தை பற்றியோ, மரத்தை சுற்றி டூயட் பாடுவதையோ துளியும் விரும்பாதவர்.. இல்லையென்றால், 20 வயது ஜெயசுதாவுக்கு, 22 வயதே ஆன ஸ்ரீவித்யா அம்மா வேடம் போடும் துணிச்சல் வந்திருக்குமா? ஒரு வலிமை மிக்க கேரக்டரை கூட, ஆற்றல் கொண்ட ஸ்ரீவித்யாவின் கண்கள் அனாயசமாக வெளிப்படுத்திவிடும்.. ஆனால் ஏனோ, அந்த ஒளிரும் கண்களில், கிளிசரினை ஊற்றி ஊற்றிதான் தமிழ் சினிமா அழ வைத்து அழகு பார்த்தது!

திருமணம்
ஸ்ரீவித்யாவின் தனிப்பட்ட வாழ்வு மிக துயரகரமானது.. ஆழ்ந்த சோகமானது.. மணவாழ்க்கையில் கசப்பு கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது.. 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின அந்த பாம்பு கூடவே இருந்தது...

புற்றுநோய்
எனினும், பலவித போராட்டங்களுடன் அவைகளை கையாண்டு, கடினத்துடன் கடந்து வந்த காலத்தில்தான், அந்த பாழாய்போன புற்றுநோய் பீடித்தது... கொஞ்சம் கொஞ்சமாய் அழகோவியம் அலங்கோலமாக தொடங்கியது.. வடித்து வைத்த சிலை ஒன்றினை கரையான் அரிக்க துவங்கியது. உடல் உருக்குலைய ஆரம்பித்தது.. இனிமையான குரலும்கூட தடம் மாற ஆரம்பித்தது!

மரண படுக்கை
தன்னுடைய சுருட்டை முடியை உருகி உருகி காதலித்ததாலோ என்னவோ, நோய் பாதித்து முடி உதிர்ந்தபோதுகூட, தன்னை யாரும் பார்த்துவிட கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.. ஸ்ரீவித்யா கடைசி நாட்களில் பார்க்க விரும்பியது கமலஹாசனை மட்டும்தான்... உணர்வுப்பூர்வமான அந்த சந்திப்பில், மரண படுக்கையில் இருந்த தனது முன்னாள் காதலியை எதிர்கொள்ள முடியாமல் கமல் ரொம்பவே தடுமாறினார் என்பதே உண்மை... அச்சூழலில் கமல் கண்கலங்கி நிற்க.. தடுமாறி விக்கித்து தவித்து கண்ணீர் விட்டது ஸ்ரீவித்யாவும்தான்!!

சொத்துக்கள்
சுற்றிலும் சூன்ய வாழ்க்கை.. இறுதியில், தன் முடிவினை ஓரளவு கணித்தும்விட்டார்.. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதை ஒருவரின் சுயநல முகம் தெரியாமலேயே முழுசுமாக நம்பி ஒப்படைத்து, உயிரையும் விட்டுவிட்டார்!!

துயரங்கள்
கோர்ட், கேஸ் என்று நடந்து, இது இப்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை.. ஆனால், எப்பேர்ப்பட்ட அந்தஸ்தை எட்டிய ஸ்டாராக இருந்தாலும் சரி, சில சூழலில் உணர்ச்சிவசத்தால் எடுக்கப்படும் திடீர் மற்றும் தவறான முடிவுகளே அவர்களின் தீர்க்கமுடியாத துயரங்களுக்கு அடிப்படையாகி விடுகிறது என்பது சாபக்கேடு போலும்..!

நாட்டியம்
ஃபேமஸ் பிரபலங்களாக இருந்தாலும்கூட, தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டி போட்டு தன்னுடனேயே அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா மிகசிறந்த உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும்..

காலத்தின் கோலம்
மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய உன்னதம், ஸ்ரீவித்யா தவிர வேறு யாருக்கும் வராது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவர் அவருக்கு கணவராக இருந்தது துரதிர்ஷ்டம்தான்.. அதேசமயம், ஒவ்வொரு முறையும், தாய்மையடைந்த போதெல்லாம், அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால், கடைசிவரை நிஜத்தாயாக வாழ முடியாமல் போனது காலத்தின் கொடுமையே..!












Click it and Unblock the Notifications