தூத்துக்குடி வசந்தகுமாரை தொடர்ந்து, தமிழிசையாலும் கனிமொழிக்கு சிக்கல்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
Recommended Video
சென்னை: கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்கள் நாடு முழுக்க இவ்வாண்டு 7 கட்டங்களாக நடைபெற்றன. அதில், தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

அதில், கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், எனவே, அவர் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், லோக்சபாத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
தமிழிசை சவுந்தரராஜன், தற்போது, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications