கடும் எதிர்ப்புக்கிடையே 'தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று வெளியீடு.. டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு உத்தரவு
சென்னை : கடும் எதிர்ப்புக்கு நடுவே தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' இன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில மாதம் முன்பு வெளியானது.

'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டீசரில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யபடுவதாகவும், அப்படியே அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் காட்சிகள் இருந்தது. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகிறார்கள். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கிறார்கள்.
அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகிறார்கள். இப்படியாக 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் இருந்தது

மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் காண்பிக்கப்பட்டது. இதுதான் கேரளாவில் கொந்தளிப்பு ஏற்பட காரணமாகியது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், மதவாதம் இல்லாத கேரளாவில் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்கள். இந்தி படமான 'தி கேரளா ஸ்டோரி' படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் மே 5-ம் தேதியான இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் அபாயம் இருப்பதால், படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்று தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னதாக தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அலார்ட் செய்தது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமை அன்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications