ஃபேஸ்புக் செய்த மாயாஜாலம்! வீடு தேடி வந்த பாடகர் வாசீகன்; வியந்து நின்ற யுகபாரதி
சென்னை: இலங்கை ராப் பாடகர் வாகீசன் தனது வீட்டுப் பக்கத்திலேயே தங்கி இருப்பது தெரியாமல் பாடலாசிரியர் யுகபாரதி அவரைப் பற்றி பாராட்டி எழுதிய ஃபேஸ்புக் பதிவு ஒன்று இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
இன்றைக்கு 2கே கிட்ஸ் கொண்டாடும் ராப் பாடகர் இலங்கையைச் சேர்ந்த வாகீசன் தான். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இலங்கையில் ஒரு ஹோட்டல் அறையில் முண்டா பனியனுடன் இயல்பாகப் பாடிய 'மருதமோ எந்தன் காவியமோ.. வள்ளுவனோ நீயும் வாசுகியோ.. அடி தேவதையோ எந்தன் காதலியோ.. அன்ன நடை ஜினுக்கு ஜிங்காரி .. வங்கக் கடல் அலையின் முத்தாகி..' என்ற டக்டக்க டக்கடக்க என்று மெட்டு போட்டுப் பாடிய பாடல் உலகத் தமிழர்கள் மத்தியில் வைரலானது.

கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு மேல் அதைப் பார்த்து ரசித்து இருந்தனர். அந்தப் பாடல் ஒரு ரா வெர்ஷன் தான். அதையே மக்கள் இந்தளவுக்குக் கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதற்கு அவரது செந்தமிழ் நடை ஒரு முக்கிய காரணம். சில ஆண்டுகளாக ராப் என்றால் ஏதோ கலகக் குரல் என்று மட்டுமே கட்டிக் கொண்டிருக்கும்போது வாசீகன், அந்த ராப் இசைக்குள் ஒரு ஆன்மிக தமிழ் நடையைக் கையாள்கிறார். கூடவே காதல் ரசத்தைச் சொட்டவிடுகிறார். அருணகிரிநாதரைப் போல் சந்தம் கெடாமல் எழுதுகிறார் வாகீசன். இவரது தேன் தமிழ் நடை தமிழ் சினிமாவின் டாப் பாடலாசிரியர் யுகபாரதியையும் உள்ளே புகுந்து என்னவோ செய்துள்ளது. வாசீகன் பாடலைக் கேட்டவுடன் அவர் அவரது ஃபேஸ்புக்கில் பாராட்டி எழுதிவிட்டார்.
யுகபாரதி தனது பதிவில், "வாகீசன் ராசய்யாவின் சில பாடல்களைக் கேட்கையில் தமிழிசைக்கு அவரால் நிறைய செய்ய முடியும் எனத் தோன்றுகிறது. சொற்களைச் சந்தத்திற்கேற்ப நிரப்புவதில் அவர் தனித்துத் தெரிகிறார். இன்றைய நவீனக் கவிஞர்கள் பலருக்கும் வாய்க்காத சந்த நுட்பங்களை அவர் வெகு இயல்பாகக் கடந்து, வார்த்தைகளைப் புதுவித அழகுடன் கட்டமைக்கிறார். அதிலும், செழுந்தமிழை நாட்டுப்புற இசையுடன் கலந்துகட்டி அவர் உருவாக்கும் கோர்வைகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன.
தொண்ணூறுகளுக்குப் பின் அறவே தமிழ்க் கவிஞர்கள் மறந்துபோன சொல்லாட்சிகளை மீட்டுருவாக்கம் செய்தளிக்கும் அவர், நம்முடைய பண்ணிசையின் சிறப்பைப் படிப்பிக்கிறார் எனலாம். திருப்புகழ், கந்தர் அனுபூதி, தேவாரம் போன்றவற்றை அவர் குரலில் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்று ஊகிக்கிறேன். ஓதுவார் மரபிலிருந்து அவர் கண்டெடுத்துள்ள இம்முறை, இன்றைய இளைஞர்களையும் ஈர்ப்பது கவனிக்கத்தக்கது. ஓசைகளை வெளியேற்றுவதுதான் நவீனக் கவிதைக்குப் பிரதானம் என்று யாரோ எப்போதோ இலக்கணம் வகுத்ததை நினைத்துக்கொள்கிறேன்.
தேய்வழக்கு என்று தவிர்க்கப்பட்ட பல சொற்றொடர்களை அவர் குரலில் கேட்கும்போது அற்புதமான வெளிப்பாடுகளாக அமைகின்றன. வாகீசர் வாய்மை திகழ்' என்று திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் எழுதுவார். உண்மையில், வாகீசன் ராசய்யாவின் சொற்பிரயோகமும் அப்படியானதே பெண் பற்றிய வர்ணனைகளே அவர் பாடல்களில் மிகுந்து காணப்படுகின்றன. என்றாலும், அவற்றை அவர் கொச்சையில்லாமல், வசையில்லாமல் வார்த்துத் தருவதால் வாழ்த்துகிறேன். சில தினங்களுக்குமுன் கார்த்திக் வேலுவும் வாகீசனைப் பற்றிய குறிப்பை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.
சுயதீன முயற்சிகளைப் பாராட்டி வரவேற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர் இன்னும் பலபடிகள் மேலேகுவார் என்பதில் சந்தேகமில்லை. வாகீசன் விரைவிலேயே தமிழ்த் திரைப் பாடலாசிரியராகவும் மலர வேண்டுமென்பது என் அவா" என்று பாராட்டி எழுதி இருந்தார்.
வாசீகன் இலங்கையில் உள்ளதாக நினைத்து யுகபாரதி தனது பாராட்டை எழுதி இருந்தார். இன்றைய சமூக வலைத்தளம் எந்த உலகத்திலிருந்தாலும் உடனே உரியவரிடம் அது போய் சேர்த்து விடும். அதைப்போல வாசீகன் பார்வைக்கு இவரது பதிவு சென்றுள்ளது. இவர் யுகபாரதியின் அதே ஏரியாவில்தான் தங்கி இருந்துள்ளார். இலங்கையிலிருந்து வந்த அவர் யுகபாரதி வீடு உள்ள ஏரியா என்று தெரியாமலே அறை எடுத்து தங்கி உள்ளார். பதிவைப் பார்த்தவுடன் தனது நண்பர்களுடன் யுகபாரதியை உடனே போய் சந்தித்துள்ளார். சமூக வலைத்தளம் எந்தளவுக்கு வேகமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு உணர்த்தி உள்ளது.
வீடு தேடி வந்த வாசீகன் பற்றி மீண்டும் யுகபாரதி ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், "அன்புத் தம்பி வாகீசனின் பாடல்கள் குறித்து காலையில் எழுதியிருந்தேன். பதிவிட்ட சிலமணி நேரத்திலேயே பலரும் அப்பதிவினைப் பகிர, அண்ணா நான் சென்னையில்தான் இருக்கிறேன். எப்போது சந்திக்கலாம்' என்றான்.
குழந்தமை மாறாத அவன் குரலைக் கேட்டதும், சந்தோசம் மும்மடங்காகப் பீறிட்டது. சமூக ஊடகத்தின் சக்தியே அதுதானே? எங்கேயோ இருப்பதாக எண்ணிக்கொண்டு நானெழுத, அவன் என் வீட்டிற்கு அருகிலேதான் ஒரு வாரமாகத் தங்கியிருக்கிறேன் என்றதும் தாளாத மகிழ்ச்சி பெருகிற்று.
நேரில் வரவழைத்து, இரண்டுமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழகழகான கனவுகள். ஆச்சரியப்படத்தக்கக் கற்பனைகள் என பலவற்றையும் பகிர்ந்தான். 'நல்லூர் கந்தசாமி கோயிலிலிருந்து கேட்ட பக்தி பதிகங்களே என்னைச் சந்தக் கவிஞனாக ஆக்கியிருக்குமோ அண்ணா' என்றான், சிரித்தபடி. அவன் பாடல் முயற்சிகளுக்கு உடனிருக்கும் நண்பர்களை அறிமுகப் படுத்தினான். பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்களில் யோகி.பி.யுடன் நான் இணைந்து எழுதிய ராப்பிசையைக் குறித்தும் ஆவலுடன் கேட்டான்.
அந்த அனுபவங்களைக் கேட்டதும், ஒரு பாடல் எப்படியெல்லாம் அவன் வாழ்வில் நுழைந்தது என்பதைத் தெரிவித்தான். வரவுள்ள சில பாடல்களையும் பாடிக் காண்பித்தான். அப்படியிருந்தது. சந்தமும் தமிழும் அவன் நாவிலும் சிந்தையிலும் புகுந்து விளையாடும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். பழைய சினிமாப் பாடல்களை அவன் புரிந்துகொண்டுள்ள விதம் சிலிர்க்க வைத்தது. நிறையவும், நிறைவாகவும் எழுது தம்பி என்று வாழ்த்தினேன்.
நம்பிக்கைதரும் இளைஞர்களைப் பார்க்கும்போது வயது குறைகிறது.. வாழ்வும் மனமும் நிறைகின்றன. இந்த நாளும் இனிய நாளாக ஆனதற்கு வாகீசனின் வருகையே காரணம்" என்று நெகிழ்ந்து போய் எழுதியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications