டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்!
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
Recommended Video

டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு என்று அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வி.சாந்தாவின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் வி.சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. மருத்துவர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு.
தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்ததற்கு காரணம் டாக்டர் வி. சாந்தாவின் அர்ப்பணிப்பு ஆகும். 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டு நோயாளிகளுக்கு சேவையாற்றி தற்போது நம்மை விட்டுப் பிரிந்துள்ளார் அவர்.
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்று அதன்மூலம் கிடைத்த தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்தவர். டாக்டர் வி. சாந்தா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அடையார் புற்று நோய் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications