தென் சென்னையின் 'கனவெல்லாம் பலிக்குதே'.. ஓஎம்ஆர்-ஈசிஆர் இணைப்புச் சாலைக்கு பிறந்தது விடிவுகாலம்
சென்னை: சென்னையில் ஓஎம்ஆர்-ஈசிஆர் இணைப்புச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக நீலாங்கரை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே 58 குடியிருப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 90 பேர் சொத்துக்களை கையகப்படுத்த மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் தயாராகி வருகிறது.
ஐடி நிறுவனங்கள் மிக அதிக அளவில் உள்ள தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் என்றால் அது ஓஎம்ஆர்-ஈசிஆர் இணைப்புச் சாலை தான். பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலை துரைப்பாக்கம் பல்லாவரம் சந்திப்பு சாலையில் இருந்து 1.4 கிலோமீட்டருக்கு திட்டமிடப்பட்டது. இந்த சாலை இணைப்பு முடிந்தால் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இந்த பாதை பணிகள் முதற்கட்டமாக கடந்த 2020ம் ஆண்டில் 204.2 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஓஎம்ஆர் பக்கத்தில் சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஒரு பாலம் அமைப்பது போன்ற வேலைகளும் கிழக்கு கடற்கரை சாலை பக்கத்தில் முழுமையாக சாலை அமைப்பதிலும் நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பில் ( பிஎஸ்ஆர் மாலுக்கு எதிரே) வேலைகள் தொடங்கியது. ஓஎம்ஆர் சாலை பகுதியில் 670 மீட்டர் நீளத்தில் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் ஈசிஆர் பக்கத்தில் நிலம் கையகப்படுத்தல் வழக்குகள் காரணமாக தடைகள் ஏற்பட்டது. நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது வழக்குகள் முடிந்துள்ளதால் மீண்டும் பணிகள் வேகமெடுக்க உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பிரிவிற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு, 3.2 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த, 142 கோடி ரூபாய் மதிப்பீட்டின்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரதன் அனந்தப்பன் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில். ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலையானது ECR இலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கான பயண நேரத்தை 40 நிமிடங்களுக்குள் குறைக்கும் என்றும், துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலைக்கு நேரடி இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துரைப்பாக்கம் சந்திப்பில் மேம்பாலம் மற்றும் பள்ளிக்கரணையின் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரை 2.1 கிமீ நீளமுள்ள உயர்மட்ட பாலம் ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது OMR-ECR இணைப்பு சாலை இல்லாத காரணத்தால்,. குறைந்தபட்சம் 10 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் திருவான்மியூர் அல்லது சோழிங்கநல்லூர் சந்திப்பிற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக எப்போதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் பீக் ஹவர்ஸில் நிலைமை கடுமையாக உள்ளது. அதேநேரம் திருவான்மியூர் டைட்டில் பார்க் மற்றும் சோழிங்கநல்லூர் இடையே உள்ள உட்புறச் சாலைகள், பெரும்பாலும் இருவழிப் போக்குவரத்திற்கு லாயக்கற்றவையாக உள்ளன. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை தாண்டி பெரிய வாகனங்கள் போக முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்கள் சோழிங்கநல்லூர் அல்லது திருவான்மியூர் சந்திப்புகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூர் இடையே அமைக்கப்பட்டு வரும் ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு சாலை, இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, தினமும் 30,000 வாகனங்கள் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதால் இனி பணிகள் வேகமெடுக்கும் என தெரிகிறது. அதேநேரம் சோழிங்கநல்லூர் மற்றும் கேளம்பாக்கம் இடையே ஓஎம்ஆர் உடன் இணைக்கும் சாலையும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதுவும் முக்கியம் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications