பழைய பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும்.. இன்று பிறந்தது போகி! சென்னையை சூழ்ந்த புகை! கண்ணே தெரியல
சென்னை: போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.. போகி கொண்டாட்டத்தால் சென்னையில் கடும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.. பழைய பொருட்களை எரித்ததால் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு புகையில் சிக்கி காணப்பட்டது சென்னை.. அதிக புகை காரணமாக சென்னையில் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளில், தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னதாக கொண்டாடப்படும் முக்கியமான பாரம்பரிய விழாவாகும். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற முதுமொழிக்கேற்ப, வாழ்விலும் இல்லத்திலும் உள்ள தேவையற்றவற்றை அகற்றி, புதிய நம்பிக்கையுடன் தை மாதத்தை வரவேற்பதே போகி பண்டிகையின் அடிப்படை நோக்கமாகும்.

நாளை தைப்பொங்கல்
நமது முன்னோர்கள், அறுவடை முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை அகற்றி, இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாளைக் கொண்டாடி வந்துள்ளனர். சங்க காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாகவும் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
மழை பொழியச் செய்யும் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இந்த விழா கருதப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
போகி பண்டிகை பொருள்
போகிப் பண்டிகை என்பது பழைய சாமான்களை அகற்றி புதிய பொருட்களை வாங்குவது மட்டுமல்ல. மனிதனின் மனதில் தேங்கியுள்ள கசப்பான நினைவுகள், துக்கங்கள், ஆணவம், அகங்காரம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, புதிய சிந்தனை, நேர்மை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாக முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், காலத்திற்கேற்ப பழைய நுட்பங்களை விட்டு புதிய நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பழமொழி உணர்த்துகிறது.
உற்சாக கொண்டாட்டம்
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று போகிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாலை நேரத்தில் பழைய பயனற்ற பொருட்களை எரித்து, மேளம் அடித்து, சிறுவர்கள் உற்சாகத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்கள்...
நாளை தைப்பொங்கலை வரவேற்கும் முன்னோட்டமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் கடும் புகைமூட்டம் காணப்பட்டது,.பழைய பொருட்களை எரித்ததால் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு புகையில் மூழ்கியது சென்னை..
வேண்டுகோள்
இதனிடையே, பழைய பொருட்களை எரித்ததன் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, பிளாஸ்டிக், டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போகி பண்டிகையால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் காற்று மாசு தற்போது மிதமான அளவில் உள்ளது. அதிகபட்சமாக மணலியில் ஏ.கியூ.ஐ 144 பதிவாகி உள்ளது. அதாவது 0-50 அளவில் இருந்தாலே நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம்.
சென்னையில் 8 விமானங்களின் சேவை ரத்து
போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம்
போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது. பழைய பொருட்களை எரித்ததால் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு சென்னையில் புகை காணப்பட்டது. காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காற்றின் தரக்குறியீடு மணலியில் 140, எண்ணூரில் 116, கொடுங்கையூரில் 107, அரும்பாக்கத்தில் 111, வேளச்சேரியில் 76 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196 ஆக பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications