எந்த நாற்காலியாக இருந்தாலும் கொள்கை மாறக்கூடாது.. சொல்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: பொது வாழ்வில் உள்ள எந்த ஒரு அரசியல்வாதியும் தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் இருந்து என்றும் மாறக்கூடாது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்திற்காக கொள்கை மாறுவது என்பது ஏற்க முடியாது. அது எந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம் என்பதற்காக கொள்கை மாறுவதை ஏற்க முடியாது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சரில் இருந்து தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவினால் அவரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்தார்கள். இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து சண்டை சச்சரவு ஆளுநரிடம் மோதல் என்று நீண்டு கொண்டே செல்கிறது.

திமுக அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் குறிப்பிட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எப்படி பேபி சக்ரமில் மீனா அவர்களின் ஆடியோ இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அது போன்று இவரின் ஆடியோவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதை திசை திருப்பவே இலாக்கா மாற்றம் அமைச்சர் மாற்றம் என்று செய்துள்ளனர் இது தமிழக மக்களிடையே எந்த ஒரு நற்பெயரையும் ஏற்படுத்தாது. மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதும் ஆனால் தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு மதுரையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் "அனைவருக்கும் இ-சேவை" என்ற திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இ-சேவை பயனர் குறியீடு வழங்கினார். விழாவில் அனீஷ் சேகர் ஐஏஎஸ், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "கிராமப்புறங்களில் அதிக அளவில் இ-சேவை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, ஏறத்தாழ 12,300 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இ-சேவைகள் அமைக்கப்பட்டு உள்ளது, தமிழகத்தில் சுமார் 200 கிராமங்களில் மட்டுமே இ-சேவை மையங்கள் அமைக்க வேண்டும், இ-சேவை மையங்களால் பொது மக்கள் அலைச்சல் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளி, திருநங்கை, கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டவர் என பல்வேறு தரப்பினருக்கும் இ-சேவை மையம் அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக தமிழகத்தில் இணைய சேவை வசதி 89 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாக உயர்ந்துள்ளது, கிராமங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு இ - சேவை மையமும், நகரில் 2 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு இ - சேவை மையம் என அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொள்கை மாறக் கூடாது, கொள்கையை பற்றி நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன். பொது வாழ்க்கையில் இருக்கிற ஒரு அரசியல்வாதிக்கு கொள்கையும் தத்துவமும் மாறக்கூடாது. ஆட்சி அதிகாரத்திற்காக கொள்கை மாறுவது என்பது ஏற்க முடியாது. அது எந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம் என்பதற்காக கொள்கை மாறுவதை ஏற்க முடியாது. அது ஆட்சியில இருக்கிறோமா எதிர்கட்சியில் இருக்கிறோமா என்பதற்காக மாறக்கூடாது என்று கூறினார்.
தமிழகத்தில் இணைய சேவை வசதி 89 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் அரசை தேடி வரக்கூடாது என்பதே முதல்வரின் விருப்பம், மக்களை தேடி அரசு செல்ல வேண்டும் என பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications