காரின் விலை 2 கோடி; ரிப்பேரிங் செலவு 1 லட்சம்; மணிக்கு 240கிமீ: பறக்கும் Formula 4 கார்கள்
சென்னை: சென்னையில் நடந்து வரும் பார்முலா 4 கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அணியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் இது குறித்து பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கியது. நேற்று இரவு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த முடிவுகளின் அடிப்படையிலேயே இன்று மெயின் ரேஸில் வீரர்கள் வரிசைப்படி நிறுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 4 சென்னை நேற்றும் இன்றும் சென்னையில் அண்ணா சாலையில் நடைபெற்று வருகின்றது. இந்த பந்தயத்துக்காக தீவுத் திடல் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக வந்து மறுபடியும் தீவுத்திடல் வரை ட்ராக் அமைக்கப்பட்டுள்ளது. கூடவே தடுப்புகள், பாதுகாப்பு டயர்கள், வழிகாட்டும் கருவிகள் என அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம் என்றால் என்னவென்றே தெரியாது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தப் போட்டிகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அங்கே அதற்காகச் சாலைகளை அரசு மேம்படுத்தி பந்தயத்தை நடத்தி வருகின்றது. இதைக் காணப் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கிக் கண்டு ரசித்து வருகின்றன. இன்று அந்த மாற்றத்தைச் சென்னை அடைந்துள்ளது. இந்தப் போட்டி பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.
அது சரி இந்த ஃபார்முலா 4 போட்டிகளில் பயன்படுத்தப்படும் கார்கள் எங்கே தயாராகின்றன? அதன் விலை என்ன? அதைப் பராமரிக்க என்ன செலவாகும்? இப்படியான பல சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் ஜா மோட்டார் ஸ்போர்ட் மொக்கானிக் சுதாகரன், "இந்த கார்களை மெக்கானிக் மட்டுமே ரிப்பேர் செய்ய முடியாது. அதற்கு என்று இஞ்ஜினியர் இருக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்தான் நாங்கள் ரிப்பேரை சரி செய்வோம். அப்படித்தான் செய்ய முடியும். அந்த பொறியாளர்கள் காற்றின் வேகம், வாகனத்தின் எடை, ஓட்டுநரின் திறன் ஆகியவற்றை அளவிட்டு அதன்படி இதனைப் பக்குவம் செய்வார்கள்.
நாம் பார்க்கும் சாதாரண கார்கள் வேறு. ரேஸ் கார் என்பது முழுதும் வேறானது. சாதாரண கார் வேகமாகப் போகும். ரேஸ் கார் என்பது வேகமாக மட்டுமே போகாது. அது இரு கட்டத்திற்கு மேல் தரையிலேயே பறக்கும். அதை ஓட்டும் போது ஒவ்வொருவரும் உணர முடியும். அதனால் இதில் உள்ள மோட்டார் என்பது அதிவேகமாக சீறும் திறன் கொண்டது. இதில் உள்ள உபகரணங்கள் ஒவ்வொன்று விலை உயர்ந்தது. எங்களிடம் உள்ள கார் இத்தாலியில் தயாரானது. முழுக்க முழுக்க கார்பன் ஃபைபர் மூலம் இதன் பாகங்களை செய்துள்ளனர். ஒவ்வொரு ரேஸ் முடிந்த பிறகு காரை முழுமையாக செக் பண்ணவேண்டும். சின்ன நெட், போல்டு கூட சரியாக உள்ளதா எனப் பார்க்கவேண்டும். ஏனென்றால், இது ரேசுக்கு சென்று வந்த பிறகு பல மாற்றங்களை அடையும். அதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். இதன் வேகம் ஒரு மணிநேரத்தில் 240 கிமீட்டர் செல்லும்.

கார்பன் ஃபைபர் பாடி ஏன் கொடுக்கிறார்கள் என்றால் வண்டி வேகம் போக வேண்டும் என்றால் அதன் எடை குறைவாக இருக்க வேண்டும். ஆகவேதான் இந்த ஃபைபர் பாடி. ஸ்டில் பாடியாக இருந்தால் எடை கூடிவிடும். வேகம் போகாது. ஏறக்குறைய விமானத்தில் என்ன மாதிரியான உபகரணங்கள் பயன்படுத்தப் படுகிறதோ அதேதான் Formula 4 கார்களில் இருக்கும். வேகமாக கார் போய் மோதும் போது டயர் அடிப்பட்டால் மற்ற வண்டிகளில் உடைந்து கொண்டு மேலே பறக்கும். அப்படி Formula 4 கார்களில் பறக்காது. அப்படிப் பறந்தால் அடுத்து பின்னால் வரும் கார் அடிப்படும். ஆகவே, அதைக் கவனத்தில் கொண்டு ரேஸ் கார்களை தயாரிப்பார்கள். ரேஸ் கார்கள் என்பது ஏரோ டைனமிக். அதாவது காற்றைக் கிழித்துக் கொண்டு பறப்பவை. இதில் 17 முதல் 19 வயது இளைஞர்கள் தான் அதிகம் ஈடுபடுவார்கள்.
இந்த காரின் மொத்த எடையே 400 கிலோதான். 1000 சிசி எஞ்சின். இதன் ஆர்பிஎம் 13 ஆயிரம். 210 பிஹெச்பி. இந்த காரின் விலை சுமார் 2 கோடி வரும். இதைப் பராமரிக்க 1 லட்சம் வரை செலவாகும். ஒரு போட்டி முடிந்த உடன் எஞ்சின் ஆயில் மாற்ற வேண்டும். பிரேக் ஷூக்களை மாற்ற வேண்டும். டயர் தரத்தை வைத்து அதையும் சரி செய்ய வேண்டும். ஒரு டயர் 2 போட்டி வரைதான் தாங்கும். அதன்பின் கட்டாயம் மாற்ற வேண்டும். டயரில் ஒரு பல் அளவு குழி இருக்கும். அந்தக் குழிதான் டயர் தேய்வதைக் காட்டும். அதன்படி 2 போட்டிக்கு மேல் டயர் தாங்காது. ஒரு போட்டி முடிந்ததும் விபத்தில் சிக்காமலிருந்தால் 1 லட்சம். அதே சேதம் இருந்தால் அதைவிட அதிக செலவாகும்.
இந்த காரை இத்தாலியிலிருந்து கொண்டு வர 20 நாட்கள் ஆகும். கப்பலில் தான் கொண்டு வருவார்கள். இரு கண்டெய்னரில் 6 கார்களைக் கொண்டு வர முடியும். இதன் உதிரிப் பாகங்களை வாங்க வேண்டும் என்றால் இத்தாலியிலிருந்துதான் வரவழைக்க வேண்டும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications