அக்கா அவரைக்காய்..தங்கச்சி முருங்கைகாய்..தலை சுற்ற வைக்கும் விலை பட்டியல்! பீன்ஸ் விலையை கேக்காதீங்க
சென்னை: கோடை காலம் முடிவடைந்த நிலையிலும் போதிய மழை பெய்யாததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி ஆகியவற்றின் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பது பொதுமக்களை கவலை கொள்ள செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. ஏப்ரல் மாதத்தில் இருந்தே கடுமையான வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

அதே நேரத்தில் மே மாதத்தின் பிற்பகுதியில் கோடை மழை பெய்தாலும் தற்போது மீண்டும் வெயில் தனது வேலையை காட்டத் தொடங்கி இருக்கிறது. அதிகாலையிலேயே வெப்பம் கொளுத்தி எடுக்கும் நிலையில் நண்பகல் வேளைகளில் அடுப்பில் அமர்ந்தது போல வெப்பநிலை அதிகமாகி வருகிறது.
காலை முதல் இரவு வரை வெப்பம் அதிகரிக்கும் நிலையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. விவசாய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கொங்கு மண்டலங்களில் தென்னை உள்ளிட்ட பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தென்னை மரங்கள் வெட்டப்பட்டு அவை செங்கல் சூளைகளுக்கும் மரக்கடைகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பல பகுதிகளில் தென்னை மரங்களே இல்லாத நிலை இருக்கிறது. இதேபோல மற்ற மாவட்டங்களிலும் காய்கறி, நெல், வாழை போன்ற விவசாயப் பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் வறட்சி காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் தற்போது அதிகபட்சமாக 200 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இதே போல 50 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காய் தற்போது 100 ரூபாய்க்கும், அவரைக்காய் 120 ரூபாய்க்கும், தக்காளி 66 ரூபாய்க்கும் நவீன் தக்காளி 72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இது மட்டுமல்லாமல் இஞ்சி 130 ரூபாய்க்கும், எலுமிச்சை பழம் 80 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 65 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், கேரட் முள்ளங்கி போன்றவை 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது கோயம்பேடு மார்க்கெட்டில் அரசு நிர்ணயத்த விலை என்பது குறிப்பிடத்தக்கது. சில்லறை விற்பனை நிலையங்களிலும் அவர்களிடமிருந்து வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கடைகளில் விற்கும் போது சற்று கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வதால் இந்த விலையில் பெரிய மாறுபாடு இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

இதனால் காய்கறி வாங்கி சாப்பிடும் காசுக்கு ஒரு கிலோ சிக்கன் வாங்கி சாப்பிட்டு விடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் சென்னை வாசிகள். அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது. தற்போது கோடை மழையும் அவ்வளவாக பெய்யாத நிலையில் வரும் காலங்களில் காய்கறி வரத்து இன்னும் குறையலாம்.. இதனால் தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
பூண்டு தற்போது 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் அதன் விலையும் அதிகரிக்கலாம் என கூறும் விவசாயிகள் வழக்கமாக கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ஒரு நாளைக்கு 800 முதல் 1000 வாகனங்கள் வரை வரும் நிலையில் தற்போது 200 முதல் 300 வாகனங்களில் மட்டுமே காய்கறிகள் வருவதே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர். மேலும் இந்த விலை உயர்வு இன்னும் சில மாதங்கள் வரை கூட நிற்கலாம் எனவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications