மழையால் வரத்து குறைவு! பெரிய வெங்காயம் விலை கிடுகிடு! நடுத்தர வர்க்கத்தினர் கலக்கம்!
சென்னை: மழையால் வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்கயாம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
வெங்காயம் விளைச்சல் பாதிப்பு: ஆண்டுதோறும் மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துவிடும். தினசரி 40 முதல் 45 லாரிகளில் கோயம்பேடு மார்கெட்டுக்கு வெங்காயம் வரத்து இருந்த நிலையில் இப்போது 30ஆக குறைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் வெங்காயத்தின் வரத்தும் இன்னும் குறையலாம் எனத் தெரிகிறது. மழையால் வெங்காயம் அழுகுவதே இந்த விலை ஏற்றத்துக்கும், வரத்து குறைவுக்கும் காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை: கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.34க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இப்போது 20 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ஒன்று ரூ.54க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த வியாபரத்திலேயே இந்த விலை என்றால் இன்னும் சில்லறை வியாபாரம் மற்றும் காய் கறிகடைகளில் விலை அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் வெளிமார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.130 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்வதால் உணவகங்களில் வெங்காயம் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.
உணவகங்களில் வெங்காயம்: ஆம்லெட்களில் கூட அளவான வெங்காயம் தான் தூவப்படுகிறது. அதேபோல் பிரியாணிக்கு கொடுக்கப்படும் வெங்காயபச்சடியும் குறைக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்குமானால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வருகிறது.
அரசு நடவடிக்கை: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மாற்று நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இப்படித்தான் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து மக்களை அவதிக்குள்ளாக்கியது.












Click it and Unblock the Notifications