ஓவர்நைட்டில் மாறிய முதல்வர் பெயர்.. மலைப்பாம்பு போல எடப்பாடி.. 50 லட்சம் கோடியா? செங்கோட்டையன் பகீர்
சென்னை: சட்டமன்ற தேர்தல் களம் தற்போது தமிழகத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்ட அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, அதிமுகவின் தூணாகக் கருதப்பட்ட மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அந்தியூர் அருகில் செங்கோட்டையன் பேச்சுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. மூத்த தலைவர் செங்கோட்டையனின் பிரச்சாரம், தவெகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து வருகிறதா?
அந்தியூர் பிரச்சாரத்தில் ஆக்ரோஷமாக பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "பவானிசாகரில் 2 ஆயிரம் கோடிக்கு அட்டை பேக்டரி, அந்தியூரிலிருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் 3 ஆயிரம் கோடிக்கு எத்தனால் பேக்டரி என இங்கு மட்டும் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

50 லட்சம் கோடி
மொத்தம் 50 லட்சம் கோடி சம்பாதித்தும் உங்களுக்கு இன்னும் ஆசை தீரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. காரணம், எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது, என் கையில் பெட்டி இல்லை.
காலையில் சசிகலா அம்மா என்னிடம் கேட்டபோது, சரி பரவாயில்லை யாரோ ஒருத்தர் இருந்துட்டு போறாங்க, கட்சியை உடையாமல் பார்த்துக்கலாம் என்று சொன்னேன்.
ஓவர்நைட்டில் மாறிய முதல்வர் பெயர்
சசிகலா அம்மாவுக்கு தீர்ப்பு உறுதியானதும், நீங்கதான் முதலமைச்சர் வேட்பாளர் செங்கோட்டையன் என்று அவரே கூறினார். ஆனால் திடீரென்று பார்த்தால் மலைப்பாம்பு மாதிரி வந்து ஒருத்தர் விழுந்தார். அப்படியே நீந்திட்டு வந்தார் பாருங்க, நானே பயந்து சேரிலிருந்து எழுந்துட்டேன். எங்கடா ரிசார்ட்டுக்குள்ள மலைப்பாம்பு வந்துருச்சான்னு நினைச்சேன்.
அப்படி காலைப் பிடிச்சு கெஞ்சிட்டு, இப்போது இவர் யார் என்னை முதலமைச்சர் ஆக்குவதற்கு, எனக்குத் தனித்தகுதி இருக்குன்னு எடப்பாடி சொல்றாரு. இப்படி எவனாவது சொல்லுவானா?" என்று மிகக் கடுமையாகச் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி Vs செங்கோட்டையன்
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மற்ற தலைவர்களைக் கையாண்ட விதம் குறித்தும் விமர்சித்தார்.. "18 பேர் ஓட்டு போட்ட டிடிவியை கழட்டி விட்டாரு. 11 பேர் ஓட்டு போட்ட ஓபிஎஸ்சையும் கழட்டி விட்டாரு. இவரைப் பலமுறை காப்பாற்றிய பாஜகவுக்கே திருநெல்வேலி அல்வா கொடுத்துட்டாரு. அதுக்கப்புறம் பிரேமலதா விஜயகாந்துக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறதா சொல்லி அவங்களையும் காலி பண்ணிட்டாரு.
அண்ணாமலை என்ன பாவம் பண்ணுனாரு? அந்த அண்ணாமலையை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணிக்கு வருவேன்னு சொல்றாரு. என்னய்யா உலகம் இது? தமிழ்நாட்டில் எவனுமே இருக்கக்கூடாது, இவர் மட்டும் 50 லட்சம் கோடி கொள்ளையடிச்சது பத்தாதுன்னு இன்னும் 50 லட்சம் கோடி வேணுங்கிறார்" எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
பணப்பெட்டி - மலைப்பாம்பு
செங்கோட்டையனின் இந்தத் திடீர் அதிரடி பேச்சுக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. காரணம் பல வருடங்களாகவே அதிமுகவின் ரகசியங்களை அறிந்த ஒரு மூத்த தலைவர், இப்போது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக பணப்பெட்டி மற்றும் பதவி தொடர்பான ரகசியங்களை அவர் உடைப்பது அதிமுக வாக்கு வங்கியில் ஓட்டையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு இது ஒரு மிகப்பெரிய 'பிளஸ் பாயிண்டாக' மாறியுள்ளது. ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் தங்கள் பக்கம் நின்று எதிர்க்கட்சியின் பலவீனங்களை பேசுவது தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் பலத்தையும், பொதுமக்களிடையே ஒரு கவனத்தையும் பெற்றுத் தந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications