நம்ம ஊரு வண்டி.. இது ராசியான வண்டி… சென்னை மாநகராட்சி கலக்கல் ஐடியா.. இளைஞர்கள் உற்சாகம்!
சென்னை: ஒரு காலத்தில் சென்னையில் சைக்கிளில் செல்வர்களை ஏதோ மாட்டு வண்டியில் பயணிப்பவர்களைப் போல முறைத்து முறைத்துப் பார்ப்பார்கள் மக்கள். ஆனால், இன்றைக்கு சைக்கிள் பயணம் என்பது கார் பயணத்தைவிடக் கெளரவமான விசயமாக மாறி இருக்கிறது.
அதற்காகவே பிரத்தியேகமான சைக்கிள்கள் சந்தைக்கு வந்துவிட்டன. அந்த சைக்கிள்களின் விலையைக் கேட்டால், ஒரு நிமிடம் ஆடிப்போய்விடுவார்கள் போன தலைமுறை ஆட்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு சைக்கிளின் விலை ப்ளைட் விலையில் விற்கிறது. 50 ஆயிரம் தொடங்கி 50 லட்ச வரை இந்த சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன.

வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசு குறைபாட்டைப் போக்க இன்றைக்குச் சைக்கிள் பயணத்தை உலக நாடுகள் பல ஊக்குவித்து வருகின்றன. ஆகவே இன்றைய இளைஞர்கள் சைக்கிளில் உலகம் சுற்றுவது என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது.
இந்தக் காலத்து இளைஞர்கள் தங்களின் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சைக்கிளில் திரும்புவதை விரும்பத் தொடங்கி உள்ளனர். பலர் இரவு நேரங்களில் சென்னையைச் சைக்கிளில் வலம் வருகின்றனர். சொல்லப் போனால், இந்தத் தலைமுறைக்கு eco-friendly என்பது மிகமிக தேவையான ஒன்றாக மாறி இருக்கிறது.

இதை உணர்ந்துதான் நமது ஸ்மார்ட் சிட்டியான சென்னை மாநகராட்சியும் சைக்கிள் பயணத்தை அதிகம் ஊக்கப்படுத்தி வருகிறது.
இதற்காகச் சென்னை முழுவதும் 'ஸ்மார்ட் பைக்' எனச் சொல்லக் கூடிய சைக்கிளுக்காக நிறைய மையங்களைத் தொடங்கி இருக்கிறது. நீங்கள் மெட்ரோ முதல் கோயம்பேடு பஸ் ஸ்டாப் வரை எங்குப் பயணித்தாலும், அருகிலேயே குறைந்த விலையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள வசதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இதற்காக தற்போது சென்னையில் 134 சைக்கிள் மையங்கள் செயல்படுகின்றன. சுமார் 1115 சைக்கிள்கள் மக்களின் பயன்பாட்டுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையைச் சென்னை முழுவதும் Chennai Smart City Limited செய்து தந்துள்ளது.
இது மட்டுமல்ல; இந்த சைக்கிள் பயணிகள் மன மகிழ்ச்சியுடன் சாலைகளில் பயணிக்கக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வழி நெடுகிலும் பசுமையான புல் வெளிகள் மற்றும் பாலங்களின் தூண்களில் தொங்கும் தோட்டங்கள் (vertical garden) எனப் பல வசதிகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்த சைக்கிள் பயணம் பற்றி, என்ன சொல்கிறார்கள் பயனாளிகள்? சில இளைஞர்களிடம் பேசினோம்.
"பெரும்பாலும் நாங்கள் அதிகாலை நேரத்தில்தான் சைக்கிளில் செல்கிறோம். அந்த நேரத்தில் இந்தப் பசுமையான தோடங்களைப் பார்த்துக்கொண்டே சைக்கிளை மிதிக்கும்போது எவ்வளவு தூரமானாலும் அந்தக் கஷ்டம் தெரிவதில்லை. காரணம், இயற்கை. நீங்கள் இயற்கையோடு சேர்ந்து பயணிக்கும்போது, அது சோர்வைத் தராது. அதற்கு மாறாக உற்சாகத்தைத்தான் தரும்.

இந்த அழகான தோட்டங்களைச் செய்து கொடுத்துள்ள சென்னை மாநகராட்சியைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால், இதே காய்ந்துபோன கட்டாந்தரையில் நாங்கள் சைக்கிள் ஓட்டினால் உண்மையிலேயே மனம் வெறுத்துப் போய்விடுவோம். சைக்கிளிங் செய்ய உடல் ஆரோக்கியம் மட்டும் இல்லை; மனம் ஆரோக்கியமும் தேவை. அதை இந்தத் தோட்டங்கள் தந்துள்ளன" என்கிறார் ஒரு இளைஞர்.
மேலும் அவர் அதிகாலை நேரத்தில் நல்ல ஆக்சிஜன் கிடைக்க இந்தப் பசுமைத் தோட்டங்கள் உதவி செய்கின்றன என்றும் கூறுகிறார்.

இந்த இளைஞரைப் போலவே வயதான ஒருவரும் சைக்கிளிங் செய்கிறார். அவர், "இந்தப் பச்சை பசேல் என்ற காட்சியே அருமையாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பசுமையான பசுமை நிறங்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும் சைக்கிளிங் போவதற்கும் தூண்டுகின்றன" என மிக அழகான தமிழில் பேசுகிறார் பஞ்சாபிக்காரர்.
"பசுமையாக மாறிவரும் இந்த சென்னையை நான் அதிகம் விரும்புகிறேன். குறிப்பாக இந்த vertical garden என்னை அதிகம் ஈர்க்கின்றன.

இன்னும் இந்த சென்னையை அதிகமாகப் பசுமைக்கு நாம் மாற்ற வேண்டும். மாசு இல்லாத ஒரு சென்னையை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக முயற்சிகளில் இறங்கி உள்ள சென்னை மாநகராட்சியை நான் பாராட்டுகிறேன்" என்கிறார் அழகான ஆங்கிலத்தில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்
சென்னைக் கடற்கரைப் பக்கம் தினம் சைக்கிளிங் செய்யும் இளைஞர் ஒருவர், "சென்னை ஏற்படும் மாசைக் குறைப்பதற்காகச் சென்னை மாநகராட்சி இந்த ஸ்மார்ட் பைக் வசதியை அறிமுகம் செய்துள்ளார்கள். இது கட்டாயம் சென்னை மாசை குறைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்கிறார்

இது குறித்துப் பேசிய அதிகாரி ஒருவர், "இந்த ஸ்மார்ட் பைக் என்பது வெறுமனே மாசுக் கட்டுப்பாட்டுக்கு மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நாங்கள் மொத்தம் மூன்று விதமான ஸ்மார்ட் பைக்குக்களை அறிமுகம் செய்துள்ளோம்.

எக்கோ பைக்ஸ் இருக்கிறது. இதை நீங்கள் வழக்கம்போல் மிதித்தால் ஓடக்கூடியது. இ பைக் இருக்கிறது. இது முழுக்க பேட்டரியில் இயங்கக் கூடியது. நீங்கள் இதன் ஆக்சிலேட்டரை திருகினால்போதும் வண்டி நகர ஆரம்பித்துவிடும்" என்கிறார்.

இந்த ஸ்மார்ட் பைக்குக்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்து எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் விடலாம். அதேபோல் ஆப் டவுன் லோட் செய்து அதன் மூலம் அதற்கான வாடகையைச் செலுத்தலாம். இது ரொம்பவே ஈசி. இதற்கான கட்டணமும் மிகமிக குறைவுதான்" என்கிறார் பல மாதங்களாக இதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர்.
வாழ்க்கையே ஒரு சைக்கிள்தான்! அந்த உண்மையை உணர்ந்திருக்கிறது சென்னை மாநகராட்சி!














Click it and Unblock the Notifications