நான் ஜெயிலில் எழுதிய கதை? சொர்க்கவாசல் அப்பட்டமான திருட்டு! கதறும் உதவி இயக்குநர்
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'சொர்க்க வாசல்' திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், அந்தப் படம் தன்னுடைய கதை என்று ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கி ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம்தான் சொர்க்க வாசல். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் திரையரங்கத்திற்கு வந்து மக்கள் அதைப் பார்த்து ஒரு கருத்தைச் சொல்வதற்கு முன்பே, அந்தப் படத்தின் கதை தனது என கிருஷ்ணகுமார் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இது தொடர்பாகப் பேட்டி அளித்துள்ள கிருஷ்ணகுமார், இந்தக் கதை திருட்டு எப்படி நடந்தது? அதற்கான ஆதாரம் என்ன? என்பது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அவர், "கடந்த 2017இல் என் மீது ஒரு வழக்குத் தொடர்பாக சைதாப்பேட்டை கிளை சிறைக்குப் போகவேண்டிய நிலை வந்தது. அங்கே ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இந்தக் கதையை எழுதினேன். கிளை சிறையில் ஒரு திரைக்கதை எழுதுவது சாதாரண விசயம் இல்லை. அங்கே பேப்பர், பென்சில் எதுவும் கிடைக்காது. அதற்கான அனுமதி இல்லை. மனு போட்டு வாங்கி கதையை எழுதினேன். மொத்தம் 15 சிறை அனுபவம். அதில் 10வது நாள் இந்த 'சொர்க்கவாசல்' கதை உருவானது.
அதைப் படமாக எடுப்பதற்கு முயற்சித்த போது எஸ்.ஆர். பிரபு இளம் இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தருகிறார் என நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே, அவரை 2022 வரை நேரில் பார்க்க முயற்சி செய்தேன். அனுமதி கிடைக்கவே இல்லை. பின்னர் ப்யூர் சினிமா நடத்திய பட்டறையில் அவரிடம் கதை சொல்லலாம். அதற்கு 4 ஆயிரம் கட்டணம் எனச் சொன்னார்கள். அங்கே பணத்தைக் கட்டி கலந்து கொண்டேன்.
அங்கே ஒரு இமெயில் கொடுத்து கதையின் சுருக்கத்தை அனுப்பச் சொன்னார்கள். அந்த மின்னஞ்சலுக்கு மூன்று கதைச் சுருக்கம் அனுப்பினேன். அதில் ஒன்றுதான் கிளைச்சிறை. பிரபு அலுவலகத்திலிருந்து போன் வந்தது. உங்களுக்குக் கதையைச் சொல்லத் தெரியுமா? என்றார்கள். நான் போனில் கதை சொல்ல அச்சமாக உள்ளது என்றேன். சும்மா ஒரு நிமிடம் சொல்லுங்கள் என்றார்கள். சொன்னேன். சரி போதும் எனக் கூறிவிட்டனர். எந்தக் கதை முழுமையாக உள்ளது எனக் கேட்டதற்கு, நான் கிளைச் சிறை என்று பதிலளித்தேன்.
உடனே ஸ்கிரிப்ட் கேட்டார்கள். முழுக் கதையைக் கொண்டுபோய் ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்தேன். போன் வரும் என்றார்கள். ஆனால், ஒரு அழைப்பும் வரவில்லை. ஒருநாள் உங்கள் கதை ஏற்கப்படவில்லை என மெயில் வந்தது. அதுதான் சொர்க்கவாசல் படமாக இப்போது வெளிவந்துள்ளது. இதன் ட்ரெய்லர் வந்த பின் நண்பர்கள் சொல்லித்தான் பார்த்தேன். அப்படியே என் கதாபாத்திரங்கள் வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உடனே ஆர்.ஜே.பாலாஜியைப் பார்த்து உதவி கேட்கச் சொன்னார்கள். அவர் அலுவலகம் என கூகுளில் ஒரு முகவரி கிடைத்தது. அங்கும் போனேன். அங்கே ஒரு மளிகைக் கடைதான் இருந்தது. பின்னர் நேரடியாக ஆர்.ஜே. பாலாஜி மேலாளர் எண் கிடைத்தது. அவருக்கு இரவு 10 மணிக்குப் போன் பண்ணேன். அவர் காலை அழைக்கச் சொன்னார். மீண்டும் அழைத்தேன். அவர் விமானத்தில் இருப்பதாகச் சொன்னார். அவருக்கு என் புகார் தொடர்பாக வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தேன். அவரும் பதிலளிக்கவில்லை.
எனக்குப் படத்தை வழக்குப் போட்டு நிறுத்த முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தெரியும். கமிஷ்னர் அலுவலகம் போய் புகார் அளிக்கவும் தெரியும். ஆனால், அதனால் என்ன பலன்? மக்கள் முன்னால் இவர்கள் செய்த தவறை நான் வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்புகிறேன். இவர்களை மிரட்டி காசு வாங்குவது என் திட்டம் இல்லை. இளைஞர்களின் வாழ்க்கையை இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கெடுக்கக் கூடாது.
இந்தப் படத்தின் கதைக்காக ஜெயிலுக்கு போய் எழுதியவன் நான். அந்த வலி உங்களுக்கு இருக்கிறதா? ஒரு நாள் ஜெயிலில் படுத்துத் தூங்கி இருப்பார்களா? அந்த வேதனை என்னவென்று சொர்க்க வாசல் இயக்குநர் அனுபவித்திருப்பாரா?" என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications