ஆட்டோவில் அறிவிப்பாளர்! பிரம்மசாரி வாழ்க்கை! ராஜேந்திரன் ராஜேந்திரபாலாஜி ஆன கதை!
சென்னை: தமிழகத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எந்நேரமும் மோசடி வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் யார் அவரது பின்னணி என்ன என்பதை அறிவதற்கான ஆவல் பலருக்கும் இருக்கும்.
Recommended Video
திருமணம் கூட செய்துகொள்ளாத ராஜேந்திரபாலாஜி யாருக்காக சொத்துக்களை குவிக்க முயன்றார் என்ற கேள்வியும் இயல்பாகவே அனைவருக்கும் எழும்.
இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் பின்னணியை இங்கே பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த ராஜேந்திரபாலாஜி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக ஊருக்குள் உலா வந்தவர். எம்.ஜி.ஆர். திரைப்படம் வெளியாகும் போது ஊர் முழுவதும் அந்தப் படத்தின் போஸ்டரை ஒற்றை ஆளாக ஒட்டி மக்கள் மத்தியில் தன் தலைவர் படத்துக்கு விளம்பரம் கொடுத்தவர். ரசிகனாக மட்டும் இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த அவர் அதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டு அப்போதைய விருதுநகர் மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்களான பாலகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

நகராட்சி கவுன்சிலர்
இப்போது போல் அந்தக்காலத்தில் பேஸ்புக், டிவிட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், கட்சிப் பொதுக்கூட்டங்கள் அதிகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அருப்புக்கோட்டை, திருத்தங்கள் பகுதியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்கள் குறித்த தகவலை ஊர் ஊராக ஆட்டோவில் மைக்கை கட்டிக்கொண்டு சென்று அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. இப்படி கட்சிக்காக பேயாக உழைத்த ராஜேந்திரபாலாஜிக்கு 1996-ம் ஆண்டு திருத்தங்கல் நகராட்சியில் வார்டு கவுன்சிலராகும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பு
கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர், திருத்தங்கல் நகராட்சி துணைத்தலைவர், பிறகு நகராட்சி சேர்மன் பதவிகளில் அமர்ந்தார். இதையடுத்து தன்னை வளப்படுத்திக்கொள்ள தொடங்கிய அவர், எம்.எல்.ஏ. சீட் வாங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பயணிக்கத் தொடங்கினார். ஜோதிடம் மற்றும் மாந்தீரிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ.சீட் வாங்குவதற்காக அந்த ரூட்டிலும் சென்றிருக்கிறார். மாந்தீரிக பூஜைகள் அவர் எதிர்பார்த்தது போல் கைகொடுக்காததால் அடுத்ததாக நியூமராலஜி முறைப்படி ராஜேந்திரன் என்ற பெயரை ராஜேந்திரபாலாஜி என மாற்றிக்கொண்டார்.

நியூமராலஜி
இவரது பெயருக்கு பின்னால் பாலாஜி என்ற பெயர் இணைக்கப்பட்டதை அடுத்து சிவகாசி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதாவால் டிக் அடிக்கப்பட்டார் ராஜேந்திரபாலாஜி. அதுமட்டுமல்லாமல் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்தது. அதற்கடுத்து அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கத் தொடங்கியது. திருமணம் கூட செய்துகொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்து வரும் ராஜேந்திரபாலாஜிக்கு எல்லாமே அவரது சகோதரிகள் மகன்கள் தான். அக்கா மகன்களுக்கு சூப்பர் மார்க்கெட், தோட்டம் என எல்லா வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்.

அதிகப் பேச்சு
கடந்த அதிமுக ஆட்சியில் குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ராஜேந்திரபாலாஜி பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அந்தளவுக்கு வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டார். ஸ்டாலினை ஒருமையில் பேசியதுடன் தைரியமிருந்தா என் ஊருக்கு வா என வீர வசனம் பேசியது முதல் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூரை பண்ணிக்குட்டி என விமர்சித்தது வரை ராஜேந்திரபாலாஜி மீது தனி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஆவினில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தான் ராஜேந்திரபாலாஜியை போலீஸார் 6 குழுக்களாக தேடி வருகின்றனர்.

தலைமறைவு
கர்நாடகா, கேரளா என இரண்டு மாநிலங்களிலும் தமிழக போலீஸாரின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக இருந்தபோது போலீஸார் சலாம் போட்ட காலம் மாறி இன்று தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.












Click it and Unblock the Notifications