நள்ளிரவில் கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார்.. அந்தரத்தில் பறந்த இளைஞர்.. கொதித்த மக்கள்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் ஒன்று மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்து உறவினர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி ரூபாவாணி (48). இவர்களது மகன் ஆகாஷ் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 21ம் தேதி இரவு கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தியேடடர் அருகில் சாலையை கடந்து செல்ல முயன்றிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ஆகாஷ் மீது மோதியது. இதில் ஆகாஷ் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனை கண்ட ஆகாஷின் நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அந்த காரை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார்கள். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்றார்கள்.
சுமார் 2 கிலோ மீட்டர் வரை துரத்திச்சென்று அரும்பாக்கம் அருகே காரை மடக்கி பிடித்தார்கள். அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் ஆகாஷின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். இதில் காரின் முன்புறம் மற்றும் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். அந்த காரை ஓட்டி வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அசீம் (25)என்பவரை கைது செய்தனர். அவர், தோல் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் என்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு தொழில் சம்பந்தமாக தனது உரிமையாளர் உள்பட 4 பேருடன் காரில் மூலக்கடை, எண்ணூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பின்னர் தாசபிரகாஷ் வழியாக வீடு திரும்பியபோது விபத்து ஏற்படுத்தியதும் தெரிந்தது. அசிம் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications