எங்க ஆட்சிதான் சிறப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்ட துரைமுருகன்.. அவையில் காரசார விவாதம்
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியை விட தற்போது கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என நான் சவால் விடுவதாக அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தெரிவித்தார். அப்போது அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் கைத் தறித் துறை அமைச்சர் ஆர் காந்தி பேசுகையில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்றவை என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் விளக்கம் அளித்தார். கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடம் இருந்துதான் துணிகளை கொள்முதல் செய்கிறது.

கொச்சைப்படுத்தக் கூடாது
ஆகையால் நெசவாளர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் அமைச்சருமான துரை முருகன் கடந்த ஆட்சி காலத்தில் கோ ஆப்டெக்ஸில் வாங்கிய துணிகள் தரமற்று இருந்ததால்தான் 4 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டு அந்த துணிகளை விற்பனை செய்ய முயன்றது.

தரமற்றது
ஆகையால் வாங்கிய துணிகள் தரமற்றது என கூறியதில் தவறில்லை என தெரிவித்தார். அப்போது மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் துரைமுருகன் ஏதோ சமாளித்து பேசுகிறார். கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் துணிகள் தரமற்றது என்றால் பொதுமக்கள் அச்சப்படுவார்கள். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு 340 கோடி ரூபாய் மானியம் வழங்கியதையும் சுட்டிக் காட்டினார்.

கோ ஆப்டெக்ஸ் நிறுவனம்
அப்போது மீண்டும் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம்தான் என்றும் கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் துணிகளில் தரமில்லை என்றால் அதை தரமில்லை என்றுதான் குறிப்பிட முடியும். கடந்த ஆட்சியை விட தற்போது கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படும் என தாம் சவால் விடுவதாக கூறினார்.

தனியார் கூட்டுறவுச் சங்கம்
இந்த விவாதத்தின் முடிவில் பேசிய அமைச்சர் காந்தி கடந்த ஆட்சியில் தனியார் கூட்டுறவுச் சங்கங்களில் தங்களுடைய துணிகளை கொடுத்து கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்ததாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பாகவும் காந்தி தெரிவித்தார். இது போல் கடந்த சில நாட்களாக சட்டசபையில் காரசார விவாதங்கள், விமர்சனங்கள், அறிவிப்புகள், நகைச்சுவைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
