கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த புதிய சிக்கல்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தது முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் முன்பு போல் வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் குமுறுகிறார்கள். முன்பெல்லாம் வெளியூர் செல்பவர்கள் கோயம்பேடு வந்தால் அப்படியே தங்களுக்கு வேண்டிய பழங்களை மார்க்கெட்டில் வாங்கி செல்வார்கள்.. இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளது.
சரியாக இந்த ஆண்டு பொங்கல் வரி கோயம்பேடு தான் தமிழ்நாட்டு மக்களுக்கே முக்கியமான இடமாக இருந்தது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு அதன் முக்கியத்துவத்தை இழக்க தொடங்கியது அதன்பிறகு தான் கிளாம்பாக்கத்தில் தற்போது அனைத்து பேருந்துகளும் புறப்படும் காரணத்தால், மக்கள் யாருமே கோயம்பேடு பக்கம் வருவது இல்லை.

வெளியூர் செல்லும் மக்கள், வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், கோயம்பேடு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள். சொந்த ஊர் செல்லும் போது பெட்டி பெட்டியாக பழங்களை வாங்கிக்கொண்டு அப்படியே பேருந்தில் செல்வார்கள். ஆனால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட பிறகு அதன் முக்கியத்துவம் குறையத் தொடங்கி உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து பஸ்நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். முன்பெல்லாம் ஊருக்கு செல்பவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பழங்களை வாங்கிக்கொண்டு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினால் சொந்த ஊர்களுக்கு நேரடியாக சென்று விடுவார்கள்.
ஆனால், இப்போது பழங்களை வாங்கினால் அதனை தூக்கிக்கொண்டு இங்கிருந்து தாம்பரம் வரை செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து இறங்கி அடுத்த பஸ் ஏறி கிளாம்பாக்கம் சென்று இறங்க வேண்டும் அல்லது. அல்லது கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திற்கு நேரடியாக சென்று இறங்கினால், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் நெடுந்தொலைவு நடந்து சென்றால் தான் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பஸ்களை பிடிக்க வேண்டும். இந்த சிரமம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது விற்பனை மிகவும் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் குமுறுகிறார்கள்.
எப்போதுமே மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் என்றாக சென்னையில் இருந்து வந்துள்ளது. கோயம்பேட்டில் 20 வருடங்களும், அதற்கு முன்பு பல வருடங்களாக பாரிஸ் கார்னரிலும் ஒன்றாக மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையங்கள் இருந்து வந்துள்ளன. இப்போது இரண்டுமே பிரிந்துவிட்ட நிலையில், மக்கள் முன்பு போல் வாங்குவது குறைந்துவிட்டது. இது ஒருபுறம், தற்போது கோடை வெயிலும் விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்கள் மற்றும் காய்றிகள் வரும் நிலையில், வெயிலுக்கு பயந்துகொண்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கொண்டு வெளியில் வர தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம் பள்ளி விடுமுறை என்பதால் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு, சுற்றுலா தலங்களுக்கு பலர் சென்றுவிட்டார்கள். எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டமே இப்போது குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications