இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை.. ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு
சென்னை: இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை, அனைவருமே இந்தியர்கள்தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
இந்தியாவில் கடந்த 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா, உள்பட 8 மாநிலங்களும் புதுவை, அந்தமான் நிகோபார் தீவுகள் உள்பட 7 யூனியன் பிரதேசங்களும் உருவானது. 1956- நவம்பர் 1 ஆம் தேதி மொழி வாரி மாநிலங்கள் உருவாகின. மாநிலங்கள் உருவானதை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேற்று விழா நடந்தது.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டிலும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அப்படி நாம் வழ்ந்தாலும் அனைவரும் இந்தியர்கள்தான். இந்தியாவில் பெரும்பான்மை, சிறுபான்மை என யாரும் கிடையாது. அனைவருமே இந்தியர்கள்தான்.
இந்த நாடு என்னும் குடும்பத்தின் பிள்ளைகளாக நாமெல்லாம் இருக்கிறோம். நாட்டை சிறப்பாக நிர்வகிக்க மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் உதயமான நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதன் மூலம் தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவர் அவமதிக்கிறார் என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவியும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து திமுகவின் கொள்கைகள் குறித்து மறைமுக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் சொல்லும் 'திராவிட மாடல்' ஆட்சி என்பதனையும் ஆளுநர் விமர்சித்து வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவியின் இத்தகைய பேச்சுக்கள் அரசியல் களத்திலும் விவாதப்பொருளாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications