அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.. முதல்வர் ஸ்டாலின் என் சகோதரர்.. பாசமழை பொழிந்த மம்தா பானர்ஜி
சென்னை: 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். அதன்பிறகு சந்திப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது மம்தா பானர்ஜி, ‛‛ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர். சென்னை வந்துவிட்டு எப்படி ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியும்'' எனக்கூறி பாசமழையை பொழிந்தார்.

மேற்கு வங்க முதல்வர்
மேற்கு வங்க முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார். இவருக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஆளுநராக இருந்த தற்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியானதால் மேற்கு வங்க மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல கணேசன் உள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக உள்ள இல கணேசன் மேற்கு வங்க மாநிலத்தை கூடுதலாக கவனித்து வருகிறார்.

தமிழகம் வந்த மம்தா பானர்ஜி
இந்நிலையில் தான் ஆளுநர் இல கணேசனின் சகோதர் 80 வது பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும்படி மம்தா பானர்ஜிக்கு, இல கணசேன் அழைப்பு விடுத்தார். மம்தா பானர்ஜியும் அழைப்பை ஏற்றுக்கொண்டு தமிழகம் வர ஒப்புக்கொண்டார். அதன்படி 2 நாள் சுற்றுப்பயணமாக மம்தா பானர்ஜி தமிழகம் வந்தார்.

ஸ்டாலின்-மம்தா பானர்ஜி சந்திப்பு
இந்த சுற்றுப்பயணத்தின்போது அறிவிப்பு செய்தது போல் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஸ்டாலின் சகோதரர் போன்றவர்
இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தினர். அப்போது மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர். சென்னை வந்துவிட்டு எப்படி முதல்வர் ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியும். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இரண்டு அரசியல் தலைவர்களும் அரசியலை தவிர்த்து வேறு விஷயங்கள் பற்றியும் பேசலாம். இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications