இந்த முறை வளரும் இயக்குநர்களுக்காக.. தெறி ரீ-ரிலீஸை ஒத்தி வைப்பதாக அறிவித்த தயாரிப்பாளர் தாணு
சென்னை: விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு வெளியாகியிருந்த தெறி திரைப்படம், பொங்கலுக்கு ஜன.15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை. ஜன.23ம் தேதி நிச்சயம் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் சொல்லப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் எழுந்தது.

சிக்கலில் ஜனநாயகன்
இந்த சிக்கல் இப்போது வரை முடிவுக்கு வராததால், திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இருப்பினும், பொங்கல் பண்டிகையை தளபதி பொங்கலாக மாற்ற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதனால், கடந்த 2016ல் வெளியான தெறி திரைப்படம் ஜன.15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார்.
ரீ-ரிலீஸ் பஞ்சாயத்து
ஆனால், இங்கும் பஞ்சாயத்து வெடித்தது. அதாவது பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். எனவே, இவர்களின் கோரிக்கையை ஏற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தாணு அறிவித்தார். ஒத்தி வைக்கப்படுகிறது எனில்? எந்த தேதி என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தாணு, ஜன.23ம் தேதியன்று படம் கண்டிப்பா தியேட்டருக்கு வரும் என்று கூறியிருந்தார்.
ஜன.23 கன்பார்ம்
எனவே விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க.. குறுக்கே வந்து கோரிக்கை வைத்தார் இயக்குநர் மோகன் ஜி. "வி கிரியேஷன் கலைப்புலி எஸ் தாணு அவர்களிடம், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுக்களுக்கு ஆதரவளித்து, தளபதியின் தெறி திரைப்படத்தை இந்த ஜனவரி 23 அன்று வெளியிடுவதை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மீண்டும் மீண்டுமா?
நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி-2 திரைப்படத்தை முக்கிய திரையரங்குகளில் வெளியிட ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
வளரும் இயக்குநர்களுக்காக..
அப்படின்னா.. இந்த முறையும் தெறி.. தெறித்து ஓடுதா? என்று விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகினர். படத்தின் ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் என்பதை சிம்பாலிக்காக, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.
இப்படி இருக்கையில், "திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் "தெறி" திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது" என்று ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதை தாணு உறுதி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications