தமிழக அரசு குட்நியூஸ்.. மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு 2 ஆண்டுகளுக்கு கிடைக்க போகும் ஜாக்பாட்
சென்னை: தமிழக அரசு, மின்சார வாகனங்களுக்கு வழங்கி வந்த 100% மோட்டார் வாகன வரி விலக்கை 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தச் சலுகை 2025 டிசம்பர் 31-டன் முடிவடைய இருந்தது. அந்த அரசாணை இன்று நீடிக்கப்பட்டிருக்கிறது.
மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார கார்கள், மின்சார ஆட்டோக்கள், மின்சார டாக்ஸிகள், மின்சார பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வாங்கினால் சாலை வரி தவிர, மின்சார வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின்படி, மின்சார வாகனங்களுக்குப் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்களுக்கு பெர்மிட் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அத்துடன் பெர்மிட் வழங்குதில் எளிமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்த முயற்சியை அரசு எடுத்து வருகிறது. 2025-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு 7.8% ஆக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு தொடர்ந்து வரி சலுகை அறிவித்து மாசில்லா தமிழ்நாடு மற்றும் மின்சார வாகனங்களின் தலைநகரம் தமிழ்நாடு என்ற இலக்கோடு செயல்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இது சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தைத் தக்கவைக்கவும், 'தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை 2023'-ன் நோக்கங்களை எட்டவும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100% வரி விலக்கு வழங்கப்படுகிறது.. மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாங்குவோருக்கு வரி சலுகை கிடைப்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications