“கேரளாவை பாருங்க.. அப்போ இங்க முடியாதா?” முதலமைச்சர் கூட்டத்தில் திருமாவளவன் சொன்ன முக்கிய பாயிண்ட்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ள விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசு செயல்படுத்திய திட்டங்கள் அடிமட்டம் வரை சென்று சேர்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தவும், கண்காணிக்கவும் இந்த கூட்டம் (திஷா கூட்டம்) நடைபெற்றது. மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் திஷா கண்காணிப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட குழு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழுவின் உறுப்பினர் திருமாவளவன் எம்பி, "விவசாய பணிகளுக்கான குறைந்தபட்ச கூலியை உயர்த்த வேண்டும். கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியம், நம்முடைய மாநிலங்களில் வழங்கும் ஊதியத்தை விட அதிகம். எனவே இந்நிலையை மாற்ற வேண்டும்" என்று அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விசிக சார்பில் அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை பட்டியலிட்டார்,
"விவசாய பணிகளுக்கான குறைந்தபட்ச கூலியை ரூ.800 வழங்கப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும். கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்படுகிற குறைந்தபட்ச மிக அதிகம். அதில் பாதி ஊதியம் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது. எனவே அங்கு வழங்கப்படும் ஊதியம் போல தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
மறுபுறம் பள்ளிகளை மேம்படுத்தும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இது பாராட்டுக்குரியது. அதே வேளையில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாக முன்வைக்கப்படுகிறது. எனவே இதனை சரி செய்யக்கூடிய வகையில் ஆசிரியர் நியமனங்களை தீவிரப்படுத்திட வேண்டும்.
ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் கண் குறைபாடு நோய்க்கான சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் கண் சிகிச்சை பிரிவை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொற்றுக்கு பிறகு, மனசிதைவு நோய்க்கு 10% பேர் ஆளாகியிருக்கிறார்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறியுள்ளன. எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மனநல ஆலோசனை மையங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும்.

சென்னை பெருநகரத்தில் வீடற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். காசிமேடு, நொச்சி நகர் பகுதிகளில் சுனாமியால் வீட்டை இழந்து இன்னும் சொந்த வீடு கட்டமுடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இதனை கணக்கில் கொண்டு அரசு இவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இது தவிர, கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டாலும் கூட ரூ.6.50 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே அரசு இந்த வரையறை தளர்த்த வேண்டும்.
நாங்குநேரி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரைக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு இடத்தில் வசிக்க, அரசு வீடு வழங்கவேண்டும் என அம்மாணவர் குடும்பத்தினரின் கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்தேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications