ஆளுநரா? ஆர்.எஸ்.எஸ்.காரரா? - தமிழ்நாட்ட குறிவெச்சுட்டாங்க - PFI குறித்த பேச்சுக்கு திருமா கண்டனம்
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். காரரை போல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தானது என்றும், மனித உரிமைகள் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய செயல்திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதற்கான வேலையை தொடங்கிவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது இன்றைய பேச்சில் இருந்து உறுதிபடுத்த முடிகிறது.

ஆன்மீகத் தலைநகரமா?
2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆன்மீகத்தின் தலைநகரம் என்று பேசினார். இந்தியாவில் தமிழ்நாட்டை ஆன்மீகத் தலைநகரம் என்று முதல் முறையாக ஆளுநர்தான் சொல்லி இருக்கிறார். வட இந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசம், ஏன் வட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் ஆன்மீகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை நாடறியும், உலகமறியும்.

ராமர் கோயில் அரசியல்
அயோத்தி, ராமல் கோயில் ஆகியவற்றை தொடர்ந்து அரசியலாக கொண்டிருக்கிற, பல பத்தாண்டுகளாக தேசிய அளவில் அந்த அரசியலை முன்னெடுத்த மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்தியாவில் உத்தரப்பிரதேசம் ஆன்மீகத் தலைநகரமா? தமிழ்நாடு ஆன்மீக தலைநகரமா? என்றால் உத்தரப்பிரதேசம் என்றுதான் சொல்ல முடியும்.

PFI குறித்து பேச்சு
ஆனால், ஆளுநர் தமிழ்நாட்டை ஆன்மீகத் தலைநகரம் என்று சொல்கிறார் என்றால் அதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. இங்கே அனுமன் சிலையை நிறுவப்போவதாகவும் அண்மையில் பிரதமர் மோடி கருத்து கூறி இருக்கிறார். இப்போது புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போல் பேச்சு
தீவிரவாத அமைப்பு, தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பு, ஐ.எஸ். போன்ற அமைப்புகளுக்கு ஆள்பிடித்துத் தருகிற அமைப்பு, மனித உரிமைகள் என்ற முகமூடியை போட்டுக்கொண்டு இங்கு தீவிரவாதத்தை பரப்பி வருகிறது.' என்றெல்லாம் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருவதை போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேசுவதை போல ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டுக்கு குறி
தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள். வன்முறைக்கு வித்திடுகிறார்கள். இங்கு மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த பேச்சு ஒரு சான்றாக இருப்பதாக கருதுகிறேன். ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications