“முறைச்சா அடிப்பீங்களா!” சிக்கலில் திருமாவளவன்? வழக்கறிஞர் தாக்குதல் வழக்கில் முக்கிய உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், விசிகவினரால் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் பெரியதாக வெடித்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில், விசாரணை நடத்தி 2 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு வழக்குகளை பதிவு செய்து இருக்கின்றனர். ஒரு வழக்கு வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கியது தொடர்பாகவும் மற்றொரு வழக்கு எதிர் தரப்பினரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரிவு 296 மற்றும் பிரிவு 115(2) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. பிரிவு 296 கீழ், 3 மாதம் வரை சிறைத்தண்டனை, ₹1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பிரிவு 115(2) கீழ், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, ₹10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது பிரிவு 126(2), பிரிவு 351(2) மற்றும் பிரிவு 352 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எதன் அடிப்படையில் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி, 2 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக பேசியிருந்த திருமாவளவன், "வாகனத்தை மறித்து முறைத்தார். நாலு தட்டு தட்டினோம்" என்று கூறியிருந்தார். முறைத்தால் தாக்குவீர்களா? என்று திருமாவளவனுக்கு பலரும் கேள்வியை எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்றார். அவரை வன்கொடுமை தடுப்பு சட்டதின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சென்னை உயர்நீதிமன்றம் அருகே, சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 7ம் தேதி, ராகேஷ் கிஷோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு, திருமாவளவன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது உயர்நீதிமன்றம் அருகே அவரது கார் வந்தபோது, அது வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் ஸ்கூட்டி மீது மோதியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ராஜீவ் காந்தி, விசிக வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு சிறு மோதல் வெடித்தது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் இருதரப்பும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர். ராஜீவ் காந்திக்கு ஆதரவாக சிலர் போராட்டங்களிலும் ஈடுபட முயன்றனர். விஷயம் தீவிரமாவதை உணர்ந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில், சம்பவம் தொடர்பாக விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.
பார்கவுன்சிலின் இணை தலைவர்கள் ஆர்.அருணாச்சலம் மற்றும் டி.சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு விசாரணையை தொடங்கும் என்பதால் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பது, அல்லது நீதி நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பார்கவுன்சில் கேட்டுக்கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications