ஆளுநர் ரவிக்கு "ரைட்ஸ்" கிடையாது, வரம்பு மீறல்.. நீட் விஷயத்தில் கொந்தளித்த திருமாவளவன்.. என்னாச்சு?
நீட் தேர்வு விஷயத்தில் ஆளுநர் அதிகாரம் குறித்து திருமாவளவன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா தீர்மானங்களை, திருப்பி அனுப்புகிற அதிகாரம் ஆளுநருக்கு உண்டா? இல்லையா? என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் தந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அதை அனுப்பி வைத்தது.
தீர்மானம் அனுப்பப்பட்டு இத்தனை நாட்களும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், சமீபத்தில் தமிழக அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.. நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தையும் ஆளுநர் ஆர்என் ரவி நிராகரித்தார்...

அதிர்ச்சி
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழக கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மறுபடியும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை மறுடிபயும் கவர்னருக்கே அனுப்பி வைத்திருக்கிறது திமுக அரசு.. இதன்பேரில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

மசோதா
ஆனால், இப்போது அனுப்பப்பட்டுள்ள தீர்மானத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அத்துடன் ஒன்றிய அரசோடு முரண்படும் எந்த சட்ட மசோதாவுக்கும் அனுமதிப்பதில்லை என்றும், அதை திருப்பி அனுப்புவதும் என்றும் ராஜ்பவன் தீர்மானித்திருப்பதாக வட்டாரங்கள் சொல்கின்றன.. ஒருவேளை இப்போது அனுப்பப்பட்டுள்ள மசோதாவையும் ஆளுநர் திரும்ப அனுப்பினால், நாங்கள் அவரை அவரது சொந்த ஊருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்போம்" என்று திமுகவின் நாஞ்சில் சம்பத் இன்றைய தினம் பேசியுள்ளார்..
பொதுவாக இயற்றப்படும் தீர்மானங்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? கூடாதா? என்ற சந்தேகங்களும் ஏற்பட்டு வருகின்றன.. ஆளுநருக்கு மசோதா தீர்மானங்களை திருப்பி அனுப்ப ஷரத்தில் இடமுள்ளதாக புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே சொல்லி உள்ளார்... ஆனால், இந்த விஷயத்தில் விசிகவின் திருமாவளவன் வேறு ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஆளுநருக்கான அது குறித்த உரிமையையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

முதல்வர் சபாஷ்
கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி கடந்த 8ம் தேதி முதல்வர் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.. நீட் விளக்கு மசோதா இந்த முறை இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

ஒத்திசைவு பட்டியல்
மாநில அரசுக்கான அதிகாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒத்திசைவு துறைகளில் மாநில அரசுகள் சட்டம் இயற்றினால் அந்த சட்டத்தை எவ்வாறு சட்ட மசோதாவை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற கேள்வி இப்போது விவாதம் ஆகியிருக்கிறது. ஒத்திசைவு பட்டியலில் ஒன்றிய அரசு சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம் என்பதுதான் இப்போது நடைமுறையில் இருந்து வருகிறது அதில் மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் வழங்க அவர்கள் தயங்குகிறார்கள் என்பது தான் இப்போது நீட் விளக்கு மசோதாவை ஏற்க மறுப்பதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
ஆளுநருக்கு திருப்பி அனுப்புகிற அதிகாரம் உண்டு எந்த அடிப்படையில் என்றால் அந்த மசோதாவில் திருத்தம் கோர வேண்டும் அல்லது விளக்கம் கோர வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம்.. தற்போது ஆளுநர் அந்த நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பவில்லை, மாறாக நிராகரித்திருக்கிறார். அதனை நிராகரிக்க கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.. ஆகவே ஆளுநர் அதிகார வரம்பு மீறல் செய்திருக்கிறார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications