ராகுல் காந்தியை சந்திக்காத திருமாவளவன்! இந்தியா கூட்டணியில் ஓட்டை? விசிகவுக்கு 2 வாய்ப்புகள்
சென்னை: விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு வந்த ராகுல் காந்தியை திருமாவளவன் சந்திக்கவில்லை. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும், விஜய்க்கு ஆதரவளித்திருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், ராகுல் காந்தியை சந்திக்காதது, விசிக இந்தியா கூட்டணியிலிருந்து விலகிவிட்டதோ? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண, எந்த கூட்டணியில் தொடர்வது என்பது குறித்து முடிவெடுக்க, விசிகவின் உயர்நிலைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவனின் நிலைபாடு
கடந்த 2016 தொடங்கி திருமாவளவன் இடதுசாரிகளுடன் பயணித்து வருகிறார். இடதுசாரிகள் எடுக்கும் முடிவை ஒட்டியே திருமாவளவனின் முடிவும் இருக்கிறது. அதேபோலத்தான் விஜய் ஆட்சியமைப்பதிலும் திருமாவளவன் முடிவெடுத்திருந்தார்.
விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியல் நின்று தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த சிபிஐ, சிபிஎம், விசிக ஆகியவை ஆதரவு கொடுத்தால், விஜய் முதலமைச்சராகலாம் என்கிற நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்து சிபிஐ மற்றும் சிபிஎம் தங்கள் மாநில செயற்குழுவில் விஜய்க்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுத்து, அதற்கு மாநில குழுவில் ஒப்புதலையும் பெற்றிருந்தன.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவுப்படுத்தப்படாமல் இருந்தது. குறிப்பாக, ஆளூர் ஷநாவஸ் உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இவர்கள் திருமாவளவனின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக இருந்தது.
ஆனால், திருமாவளவன் ஏற்கெனவே சொன்னதை போல, இடதுசாரிகளின் முடிவை ஒட்டியே அவரும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்தார். எனவே, விஜய் நேற்று முன்தினம் ஆளுநர் அர்லேக்கரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து, நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இப்படி இருக்கையில், நேற்று விஜய் பதவியேற்பு விழாவுக்கு வந்த ராகுல் காந்தியை திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் சந்திக்காதது விவாதமாகியிருக்கிறது.
திமுக கூட்டணியிலிருந்து விலகி வந்துதான் விஜய்க்கு விசிக ஆதரவளித்திருக்கிறது. அப்படியெனில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக தொடர்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தொடர்கிறது எனில் ஏன் ராகுல் காந்தியை திருமாவளவன் சந்திக்கவில்லை? அப்படியெனில் திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறதா? என்றும் சிலர் கேட்கின்றனர். நாடாளுமன்றத்தை பொறுத்தவரை திமுக தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளது.
ஒன்று இந்தியா கூட்டணி, இன்னொன்று திமுக கூட்டணி. இப்படியாக திருமாவளவன் முன்பு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் எந்த கூட்டணியில் இணைந்து பயணிப்பது? என்பது குறித்து அடுத்த 2 வாரத்தில் நடைபெற உள்ள உயர்நிலை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications