திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்!
சென்னை: திமுகவிடம் நேரடியாக ஆளூர் ஷா நவாஸ் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக விசிகவின் இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் விளக்கம் அளித்துள்ளார். ஷா நவாஸ் அறம் சார்ந்து செயல்படவில்லை என்று கூறிய சங்கத்தமிழன், திருமாவளவனை மீறி தொகுதி மாறுவதற்காக திமுகவிடம் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விசிக வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த நாள் முதலே பல்வேறு குழப்பங்களும், சர்ச்சைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நாகை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான ஆளூர் ஷா நவாஸ்க்கு சீட் கொடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஷா நவாஸ் நாகை தொகுதியில் இருந்து மாற விரும்புவதாக திமுகவிடம் பேசியதாக தகவல் வெளியானது. இதன் காரணமாகவே திருமாவளவன் ஷா நவாஸ்க்கு சீட் மறுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஷா நவாஸ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் அளித்துள்ள பேட்டியில், விசிக வெற்றி பெறுவதற்கு ஷா நவாஸ் இந்நேரம் களத்தில் இருந்திருக்க வேண்டும். ஷா நவாஸ் அவரின் பிரச்சனையை மட்டுமே பேசி வருகிறார். இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற என்ன செய்தார்?
சுயலாபத்திற்காக செயல்பட்டு வந்தார். திருமாவளவனிடம் நேரடியாக சென்று ஷா நவாஸ் பேசியிருக்கலாம் தானே.. கீழே இருப்பவர்கள் இப்படி சொல்கிறார்கள்.. தெரியாமல் நடந்துவிட்டது.. அடுத்ததாக என்ன பணி செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே.. ஷா நவாஸை போல் எஸ்.எஸ்.பாலாஜிக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. அவர் வாயையே திறக்கவில்லை.
சின்ன வயதிலேயே ஷா நவாஸ்க்கு பதவியை கொடுத்துவிட்டார்கள். அதனை சமாளிக்க தெரியவில்லை. ஷா நவாஸ்க்கு பக்குவம் போதவில்லை. எஸ்.எஸ்.பாலாஜி ஒருநாளும் முதல்வர் ஸ்டாலினை தனியாக சென்று கூட சந்திக்கவில்லை. மற்ற விசிக எம்எல்ஏ-க்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளார்கள். ஷா நவாஸ்க்கு கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை.
ஆனால் புதிய நிர்வாகிகளுக்கு அதிகாரம் செல்ல வேண்டும் என்பதே விசிகவின் எண்ணம். திருமாவளவனுடன் ஷா நவாஸ் ஒரு புகைப்படம் எடுத்தாலே பிரச்சனை முடிந்துவிட்டது. ஷா நவாஸ் அறம் சார்ந்து செயல்படவில்லை என்ற வருத்தம் உள்ளது. ஷா நவாஸ் நல்ல தம்பி என்று பெயர் எடுத்துள்ளவர். அவர் அப்படி செயல்பட கூடாது. திருமாவளவனை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
நாகை தொகுதி வேண்டாம் என்றால், திருமாவளவனுடன் தான் ஷா நவாஸ் பேசியிருக்க வேண்டும். அவர் நேரடியாக திமுகவிடம் பேசியிருக்க கூடாது. விசிகவின் 10 துணை பொதுச்செயலாளர்களில் ஜூனியர் ஷா நவாஸ் தான். நான் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசியல் பயிற்சி பட்டறை நடத்தி இருக்கிறேன். அதுபோல் ஷா நவாஸ் ஏதாவது செய்திருக்கிறாரா? வேங்கைவயல் பிரச்சனையின் போது ஷா நவாஸ்-ஐ அழைத்த போது, அவர் போனையே எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications