மதத்தை வைத்து குழப்பம் ஏற்படுத்த நினைத்தால்.. தமிழ்நாட்டு மண்ணில் பலிக்காது! உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை: மதத்தை வைத்து இங்கே குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை தமிழ்நாட்டு மண்ணில் பலிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது திராவிட மண், தமிழ் மண் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், நிச்சயமாக அதற்கு தமிழக அரசும் இடம் கொடுக்காது, மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்த நிலையில், நேற்று மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி போலீசார் மலையேறுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை தமிழ்நாட்டு மண்ணில் பலிக்காது. இது திராவிட மண், தமிழ் மண்.. நிச்சயமாக தமிழக அரசும் இடம் கொடுக்காது. இதனை நிச்சயமாக தமிழக மக்களும் விரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கருத்து அக்கட்சியினர் மத்தியில் அதிகமாக டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications