தமிழக அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் வரைந்த ஓவியத்தில் காவி உடையில் திருவள்ளுவர் சிலை வரையப்பட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில் குறிப்பிட்ட மாணவரிடம் இனி காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலை வரையக்கூடாது என்று அறிவுறுத்தினார். தற்போது கண்ட்காட்சியில் இருந்து அந்த ஓவியம் நீக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், "திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஓவிய கண்காட்சி" நடந்து வருகிறது. காலை 8 மணியில் இருந்து இந்த கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த ஒவிய கண்காட்சியில் மாணவ - மாணவிகள் பல்வேறு விதமான திருவள்ளுவர் சிலைகளை ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர். பல வண்ணங்களில் திருவள்ளுவர் சிலை, ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஒரு மாணவர் காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வரைந்திருந்தார். இந்த ஓவியமும் இக்கண்காட்சியில்ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஓவிய கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அப்போது காவி உடையில் திருவள்ளுவர் ஓவியம் வைக்கப்பட்டது குறித்து அவரிடம் சொல்லப்பட்டது. இதையடுத்து பேசிய அன்பில் மகேஷ், 'இந்த மாணவர்களிடம் இப்படி வரையக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்' என்று கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்ததால், ஓவியக் கண்காட்சியில் இருந்து குறிப்பிட்ட அந்த மாணவர் காவி உடையில் வரைந்திருந்த திருவள்ளுவர் ஓவியம் நீக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே பாஜக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைப்பதாக பாஜகவை திமுக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகய சூழலில் அரசு கண்காட்சியிலேயே காவி உடை அணிந்த திருவள்ளுவர் ஓவியம் காட்சிப்ப்படுத்தப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications