அதிரடி.. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் 2 பேர் கைது..தப்ப முயன்றபோது தட்டித்தூக்கிய போலீஸ்
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் ரொக்கப்பணத்தை கடந்த 12ம் தேதி வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றது.
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளையடித்த வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் வைத்து கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரித்து வரும் நிலையில் அவர்களை எங்கு? எப்படி? போலீசார் தட்டித்தூக்கினர் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதி எஸ்பிஐ ஏடிஎம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கடந்த 12ம் தேதி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரியான திட்டமிடலுடன் ஏடிஎம் மையங்களில் நுழைந்து இந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

வடமாநில கொள்ளையர்கள்
இந்த 4 ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ.75 லட்சத்தை கொள்ளை கும்பல் தூக்கி சென்றது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டதை உறுதி செய்தனர். மேலும் அவர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது கொள்ளை கும்பல் கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள விடுதியில் தங்கி சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் அங்கிருந்தபடியே அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து ஏடிஎம் மையங்களை பார்வையிட்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடகாவில் கோலாருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசார் வருகையை அறிந்த கும்பல் எஸ்கேப் ஆனது.

கொள்ளை கும்பல் தலைவர் கைது
இதையடுத்து ஹரியானா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். ஹரியானாவில் பதுங்கிய 2 கொள்ளையர்களை கடந்த 18 ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் முகமது ஆரிப் தான் கொள்ளை கும்பல் தலைவன் என கூறப்படுகிறது. இவர்களை தமிழ்நாடு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் 2 பேர் கைது
இந்நிலையில் தான் தற்போது ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் குர்தீப் பாஷா, அஷ்ரப் கான் என்பதாகும். இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தட்டித்தூக்கியது எப்படி?
இவர்கள் கர்நாடகாவில் இருந்து ஹரியானாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு வந்த நிலையில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து வந்துள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் இன்னும் 2 பேர் பதுங்கி உள்ளதாகவும், அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications