“அந்த” கட்சி.. சூடுபிடிக்கும் “செங்கோல்” சர்ச்சை! பெயர் சொல்லாமல் விமர்சித்த திருவாவடுதுறை ஆதீனம்
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக குறிப்பிட்டு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் சடங்குகளை பொய் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று செங்கோல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாகச் சில அறிக்கைகளைக் கண்டோம். 1947-ல் ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.

ஆட்சி மாற்றத்தின்போது அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர், தங்க செங்கோல் செய்வித்து முறையான சடங்குகளில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள்.
பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தமபிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார். அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையின் மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயலுதல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்பட வேண்டியவை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாளை சாவர்க்கர் பிறந்தநாளன்று திறந்து வைக்க இருக்கிறார். இதில் திருவாவடுதுறை ஆதீனம் இந்தியா சுதந்திரம் பெற்றப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் அளித்த செங்கோல் வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாடு ஆதீனங்கள் டெல்லிக்கு புறப்பட்டனர். இதற்கிடையே செங்கோல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும், விமர்சனங்களும் வெளியாகின. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் செங்கோல் வைப்பதை விமர்சித்தன.
செங்கோல் மூலமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்து இருந்தார். ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட செங்கோல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது உண்மை என்று கூறி அவர், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாறுவதற்கான அடையாளமாக செங்கோல் இல்லை என்றார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியும் செங்கோல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மன்னராட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த செங்கோலை மீண்டும் கொண்டு வந்து பிரதமர் மோடியிடம் கொடுப்பது அவருக்கு முடிசூட்டு விழா நடத்துவதை போன்றது என்று அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications